வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு 4 ஆண்டுகால இழுபறியின் பின்னர் ஒப்புதல்!
வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு 4 ஆண்டுகால இழுபறியின் பின்னர் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து, வடக்கு மாகாண ஆளுநர் அலு வலகத்துக்கு முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் தற்போதைய ஆட்சியின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னமும் 5 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில் இந்த அனுமதி வழங் கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக அடுத்த மாதம் 2ஆம் திகதி பதவியேற்கும் சி.லோகேஸ்வரன், முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்துக்கான ஒப்புதலை உத்தியோகபூர்வமாக வழங்குவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அன்றைய தினம் மாகாணத்துக்கு உட்பட்ட சில இடமாற்றங்களும் வழங்கப்படக் கூடும் என்று அறியமுடிகின்றது.
வடக்கு மாகாண சபை 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போதைய ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அதனை நிராகரித்திருந்தார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய ஆளுநராக பளிகக்கார பதவியேற்றிருந்தார். முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் மீளவும் திருத்தப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால், ஒப்புதலை வழங்குமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை. இதனால் இழுபறி நீடித்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரச தலைவர் மைத்திரிபாலவை நேரில் சந்தித்திருந்தபோதும், முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்த நிலையில், 4 ஆண்டுகால இழுபறியின் பின்னர் நிதிய நியதிச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க, சட்டமா அதிபர் திணைக்களம் ஆளுநர் அலுவலகத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளது
Post a Comment