Header Ads

test

அரைக்கிணற்றைக் கூடத் தாண்டவில்லை அரசாங்கம்! - மனோ கணேசன்


தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசாங்கம் தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை. இலங்கை பிரதம அமைச்சர் தொடர்பில், தீர்மானக்கரமான நம்பிக்கை வாக்களிப்பு நான்காம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற போகிறது. இலங்கை வேந்தன் தன் சகோதரன் இராவணனை, கும்பகர்ணன் கைவிட வில்லை. இன்னொரு சகோதரன் விபீடனன் கைவிட்டான். இதில் நாம் என்ன செய்வது? கும்பகர்ணனையா, விபீடனனையா, வழிகாட்டியாக கொள்வது என நாட்டின் வடக்கிலும், தெற்கிலும் நம்மவர் சிலருக்கு இங்கே குழப்பம். நம்மில் சிலர் அளவுக்கு அதிகமாக புல்லரித்து போய், திடுக்கிட்டு போய், இவர்களில் ஒரு சாராரை இராமர்களாகவும், அடுத்த சாராரை இராவணர்களாகவும் கருதிக்கொண்டு தடுமாறுகிறார்கள். எனக்கு ஒரு குழப்பமும் கிடையாது. சமூக அரசியல் விஞ்ஞானி கம்பவாருதிக்கும் அந்த குழப்பம் கிடையாது, என நான் நினைக்கின்றேன்,. ஏனென்றால் இங்கே இராமனும் இல்லை. இராவணனும் இல்லை. என் மனசாட்சிப்படி என் சமுதாயம்தான் எனக்கு முக்கியம். இரு தரப்பும் அசுரர்கள்தான். ஒரு அசுரனை அனுப்பினால் வந்து அமரப்போவதும் இன்னொரு அசுரன்தான். ஆகவே இரண்டு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று கூட்டிக்கழித்து தேட வேண்டியதும், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகிய இலக்குகளை அடைய புதிய வழிகளை தேடுவதும்தான் எங்கள் நோக்கம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், இன்று மாலை, கொழும்பு கம்பன் கழக விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது கூறினார். இங்கு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, புதிய வழிகளை தேட வேண்டும் என்று நான் கூறினேன். ஏன் அப்படி கூறினேன்? நாம் கையாண்ட பழைய வழிகளில் பல பலன் தரவில்லை. சில அரைகுறை பலன்களை தந்துள்ளன. சில பிச்சை வேண்டாம், நாயை பிடி என இருந்த இருப்புக்கும் வேட்டு வைத்து விட்டன. தமிழரசு தந்தை செல்வா சத்தியாக்கிரக வழியை தேடி, பின் உள்ளூரில் ஒப்பந்தங்களை செய்து தீர்வை தேடும் வழியை முன்னெடுத்தார். அந்த வழிக்கு பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மாமனிதர் அஷ்ரப் ஆகியோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் வலு சேர்த்தனர். பின் கூட்டனி தலைவர் அண்ணன் அமிர்தலிங்கம் பாரதத்தின் துணையை பிரதானமாக கொண்டு தீர்வு தேடும் வழியை நாடினார். அதையடுத்து விடுதலைப்புலிகள் தலைவர் ஆயுத போராட வழியை முன்வைத்து போராடினார். இன்று கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், உலக சமூகத்தை துணைக்கு கொண்டு, ஐநா சபை மூலம் தீர்வு தேடும் வழியை முன்வைத்து அவரால் இயன்றதை செய்து வருகிறார். இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான், சகோதர இனங்களுக்கு எமது இன்னல்களை, அபிலாஷைகளை எடுத்து கூறி தீர்வு தேடும் சகவாழ்வு வழியை முன்வைத்து என்னால் இயன்றதை செய்து வருகிறேன். இந்த அனைத்து வழிகளும் தீர்வை கிண்டு வராவிட்டால், கடவுள் விட்ட வழிதான். தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு தேடும் பணி இன்று பாதியில் நிற்கிறது. இதுவரையிலே எமக்கு கிடைத்து இருப்பது, இடைக்கால அறிக்கை என்ற ஒரு ஆவணம் மட்டுமே. இதற்கு முன் எங்கள் முன்னோர் எழுதி வைத்த ஆவணங்களுடன் இதையும் அடுக்கி வைக்க போகிறோமா என நாம் தீர்மானிக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், என்பது சீர்கெட்டு போய் இன்று அம்பாறை, கண்டி வரைக்கும் வந்து விட்டது. சீருடைகள் அணிந்தால், அதாவது படைத்தரப்பு சீருடை, மத சீருடை அணிந்து இருந்தால், சிங்கள பெளத்தர் அல்லாத மக்களுக்கு எதிராக எதையும் செய்துவிட்டு தப்பி விடலாம் என்ற நிலைமை உருவாகி விட்டது. கைதிகள் முழுமையாக விடுவிக்கப்பட வில்லை. வடக்கில், மலையகத்தில், கிழக்கில், இங்கே எனது கொழும்பில் எங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களில் அரச அபிவிருத்தி என்பது கண்டு மகிழும் அளவிற்கு நடைபெறவில்லை. வடக்கில் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டு, வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. கல்வீடா, கல் அல்லாத வீடா என்று இரண்டு வருடங்களாக இன்னமும் விவாதம் செய்து கொண்டு இருக்கிறோம். மலைநாட்டிலும் காணிகள் வழங்கப்படவில்லை. வீடுகள் கட்டும் பணி இன்னமும் வேகப்படுத்தப்படவில்லை. ஆகவேதான் இரண்டு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று கூட்டிக்கழித்து தேடி, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகிய இலக்குகளை அடைய புதிய வழிகளை தேடுவது எனது நோக்கம் ஆகியுள்ளது. அந்த வழியை எங்கள் அரசுக்கு உள்ளேயே தேடும் நோக்கில் நாம் இருகின்றோம். பழைய ஆட்சியரை கொண்டு வந்து சிம்மாசனத்தில் அமர செய்ய விரும்பவில்லை.

No comments