Header Ads

test

கிளிநொச்சியில் சந்திரகுமார் இல்லை:ஈபிடிபி உண்டு!



கிளிநொச்சியில் சுயேட்சையாக போட்டியிட்ட சந்திரகுமார் போன்ற ஓட்டுக்குழுவிடம் மண்டியிட்டு ஆட்சி அமைப்பதனை விட கரைச்சி , பச்சிலைப்பள்ளி சபைகளில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வோம். அவர்களின் ஆதரவு தேவையில்லை என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அறிவித்துள்ளார்.
எனினும் கிளிநொச்சியில் சிறீதரன் தரப்பிற்கு ஈபிடிபி ஆதரவளிக்குமென அக்கட்சியின் முக்கியஸ்;தரான ஜெகன் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களிடையே உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக சி.சிறீதரன் விடுத்த ஊடக அறிக்கையில் தமிழ் மக்களின் நீண்ட பெரும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைகளுக்கு எதிராகவும். தம் இனத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழர்கள் சிந்திய இரத்தமும், வியர்வையும், இன்றளவும் தமிழர்கள் சுமக்கும் வலிகளும் எண்ணிலடங்காதவை.
இருள் பொதிந்த இறுதிப்போருக்குள் அகப்பட்டுக்கொண்ட நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உண்ணஉணவின்றி ,உடுக்கத்துணியின்றி, இயற்கைக் கடன் தீர்க்கக்கூட இடமில்லாமல் அலைந்தபோது, வன்னிமண்ணில் வெறும் 75, 000 பேர்தான் உள்ளனர் என்ற அரசு உணவு கூட அனுப்பாமல் குழந்தைகளையும், வயோதிபர்களையும், காயப்பட்டவர்களையும், கர்ப்பவதிகளையும் பட்டினிபோட்டு, பாதுகாப்புவலயம் என அறிவித்த பகுதிக்குள்ளேயே பொஸ்பரஸ் குண்டுகளையும், கொத்தணிக் குண்டுகளையும் வீசி எம்மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றொழித்த போது அரசோடு துணை இராணுவமாகச் செயற்பட்ட  சந்திரகுமாரிடமும் ஆதரவுக்கரம் நீட்டி ஆட்சி அமைக்கும் இழி செயலை கிளிநொச்சி மாவட்ட மக்களாகிய நாம் ஒருபோதும் செய்துவிடமாட்டோம்.

தமிழர்கள் பல தசாப்த காலங்களாக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்தி வளர்த்தெடுத்த விடுதலைப்பயிரை வேரோடு பிடுங்கியெறிந்துவிட்டு, தமிழ் இனத்தினது இருப்பையே சிதைத்து சின்னாபின்னமாக்கிய சிங்கள அரசோடு சேர்ந்து வெற்றிவிழாக கொண்டாடியும், 2011 இல் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் ஆணையகத்தில் இன அழிப்புக்கான போர்க்குற்ற விசாரணைக்கு அத்திவாரமிடப்பட்டபோது, டக்ளஸ் தேவானந்தா ஜெனீவாவின் முன்றலிலும், சந்திரகுமார் கிளிநொச்சி நகரத்திலும்,‘இறுதிப்போரில் இறந்தவர்கள் அனைவரும் புலிகளேயன்றி பொதுமக்களல்ல’என அப்போதைய அரசுக்கு ஒப்புக்கொடுத்ததை போரின் வலிகளை சுமந்துநிற்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்துவிடப்போவதில்லை.
2006ம் ஆண்டிலிருந்து இறுதிவரை யாழ்ப்பாண மண்ணில் 3000க்கு மேற்பட்ட இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதற்கும், 1990களில் யாழ் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் கொப்பேகடுவவால் அழைத்துவரப்பட்ட 160க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மண்டைதீவு தோமையார் ஆலய முன்றல் கிணற்றிலும், செம்பாட்டுத் தோட்டக் கிணற்றிலும் தூக்கிவீசப்பட்டபோது அல்லைப்பிட்டியில் வைத்து உங்கள் பிள்ளைகளுக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன் எனக் கூறி, அப்படுகொலைகளுக்கு காரணமான டக்ளஸ் தேவானந்தாவும், அவரது அடிவருடி சந்திரகுமாரும் எப்படி எம்மோடு சம பங்காளிகளாகிவிட முடியும்?

கரைச்சி பிரதேச சபையிலும் ,பச்சிலைப்பள்ளி பிரதேச சபையிலும் எமக்கு கிடைத்த பெரும்பான்மையின் அடிப்படையில் தலா ஒவ்வொரு ஆசனப்பற்றாக்குறை உண்டு என்பது உண்மையே என்றாலும் ஆட்சி அமைப்பதற்காக இணைந்து செயற்படுமாறு நாம் ஒருபோதும் அவர்களை கோரவுமில்லை. இனி எப்போதும் அவ்வாறு கோரப்போவதுமில்லை. மாறாக இந்த இரண்டு சபைகளிலும் எமது கட்சி தவிர்ந்த ஏனையவர்கள் எல்லோரும் இணைந்து ஆட்சி அமைத்தால், நாங்கள் ஜனநாயக பண்புகளின் அடிப்படையில் ஆரோக்கியமுள்ள எதிர்க்கட்சியாக எமது பணியை எம்மக்களுக்கு ஆற்றுவோம். தேர்தல்களில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானதே! இவ்விரு சம்பவங்களும் நடக்கின்றபோது மக்களும், நாங்களும் விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம். அதற்கான காலமௌனிப்பாக இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமானால் அதற்கும் நாம் தைரியமான எண்ணத்தோடு தயாராக இருக்கிறோம்.

கொள்கைக்காக குப்பி கடித்து உயிர் மாய்த்த மாவீரர்களின் கந்தக மண்ணிலே, எதிரிகளை விட துரோகிகளே மன்னிக்கப்படமுடியாதவர்கள். அத்தகைய துரோகமிழைத்து, எம் இனத்தை அழித்தவர்களுடன் அணிசேர நாம் ஒருபோதும் தயாரில்லை. நாங்கள் எடுக்கும் முடிவு சரியா,பிழையா என்பதை வரலாறும், எம் தமிழ் மக்களும் தீர்மானிக்கட்டுமென சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

No comments