இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவை மாற்றம் – ரவிக்கு கிட்டுமா பதவி?
சிறிலங்கா அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதனால், அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று காலை 9.30 மணிக்கே அதிபர் செயலகத்துக்கு வந்து விடுமாறு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், இடம்பெறவுள்ள இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.
கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து, கடந்த சிலமாதங்களாக நிலவி வந்த குழப்ப நிலைகளின் தொடர்ச்சியாக இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.
இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வசம் இருந்த சமுர்த்தி அமைச்சு ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது.
கலாசார விவகார அமைச்சு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டை அடுத்து பதவி விலகிய முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சர் பதவியை வழங்குமாறு ஐதேக கோரியிருந்தது.
அதற்கு சிறிலங்கா அதிபர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று பதவியேற்கும் அமைச்சரவையில் ஐதேகவைச் சேர்ந்த 32 பேரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 10 பேரும் இடம்பெறுவர் என்று உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் கூறின.
அதேவேளை, கலாநிதி சரத் அமுனுகமவுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
Post a Comment