பதவி நிலைகள் தொடர்பில் பரிந்துரைக்க 12 பேர் கொண்ட ஆலோசனைக் குழு
அலரி மாளிகளை சுமார் 7 மணித்தியாலங்கள் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், இரகசிய வாக்கெடுப்பின் மூலம் குறித்த குழுவினர் நியமிக்கப்பட்டதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தாம் உட்பட மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, நவீன் திஸாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, அகிலவிராஜ் காரியவசம் ஆகிய அமைச்சர்கள் இந்தக் குழுவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர்களான ருவான் விஜேவர்ன, எரான் விக்கிரமரட்ன மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோரும், பிரதி அமைச்சர் ஜே. சி. அலவத்துவலவும் இதில் அடங்குகின்றனர்.
மேலும், நளின் பண்டார மற்றும் அசோக ப்ரியந்த ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தாதிருக்க செயற்குழுக் கூட்டத்தில் பெரும்பாலானோர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த பெரும்பான்மையானோர் இணக்கம் தெரிவிக்கவில்லை என்பதால், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவே கட்சியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கட்சியின் தலைவர், பிரதித் தலைவர் மற்றும் உப தலைவர் பதவிகள் தவிர்ந்த ஏனைய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, தவிசாளர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதேவேளை, குறித்த செயற்குழுக் கூட்டத்தில், விசேட அழைப்பின்பேரில் அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் அவரது புதல்வாரன நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாநாயக்க ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய உள்ளதாக குறித்த கூட்டத்தில் பிரதமர் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டடியாராச்சி தெரிவித்துள்ளார்
Post a Comment