சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேரே நேற்று நள்ளிரவில் கூட்டு அரசில் இருந்து விலகியுள்ளனர். புத்தாண்டுக்குப் பின்னர், கூடும் நாடாளுமன்றத்தில் தாம் எதிரணி வரிசையில் அமரவுள்ளதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர். நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது இவர்கள் தமது பதவி விலகல் கடிதங்களைக் கொடுத்தனர். அதனை சிறிலங்கா அதிபர் ஏற்றுக் கொண்டார் என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவாக எதிரணியில் தாம் அமரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தனியான அணியாகவே தாம் இயங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜெயந்த, எஸ்.பி.திசநாயக்க, திலங்க சுமதிபால, லக்ஸ்மன் வசந்த பெரேரா, சந்திம வீரக்கொடி, டிலான் பெரேரா, சுமேதா ஜெயசேன, சுசந்த புஞ்சி நிலமே, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, தயாசிறி ஜெயசேகர, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, ஜோன் செனிவிரத்ன, ரி.பி.எக்கநாயக்க, தாரநாத் பஸ்நாயக்க, அனுராத ஜெயரத்ன ஆகிய 16 பேருமே கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளனர்.
Post a Comment