Header Ads

test

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரிக் கோப்பு!


புதிய உள்நாட்டு வருவாய் சட்டம், நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது . அந்தச் சட்டத்தின் பிரகாரம், 18 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் புதிய வரிக்கான கோப்பு ஒன்று திறக்கப்படும் என்றும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க, உள்நாட்டு வருவாய் சட்டமூலம், அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் சம்பளங்கள் மீதான வரி செலுத்தல், திருத்தப்பட்டுள்ளது. அதுவும் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின் பிரகாரம், சம்பாதிக்கும் போது தற்போது அறவிடப்படும் செலுத்தவேண்டிய வரி​ எல்லையானது வருடாந்த சம்பளத்தில் 7.5 இலட்சம் ரூபாய் முதல் 12 இலட்சம் ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால்,தற்போது வருமான வரி செலுத்துகின்ற ஒரு பிரிவினர், திருத்தப்பட்ட உள்நாட்டு வருவாய் சட்டமூலத்தின் ஊடாக, விலக்களிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. வருடாந்த வருமானம் 12 இலட்சம் ரூபாய் முதல், அதிகரிக்கப்படும் முதலாவது 6 இலட்சம் ரூபாய்க்கு 4 சதவீத வரி அறிவிடப்படும். அதன் பின்னர், அதிகரிக்கப்படும் ஒவ்வொரு 6 இலட்சம் ரூபாய்க்கும் முறையே, 8 சதவீதம், 12 சதவீதம், 16 சதவீதம் 20 சதவீதம் மற்றும் 24 சதவீதம் என்றடிப்படையில் அதிகரிக்கும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டு வருவாய் சட்டம் திருத்தப்படுவதற்கு முன்னர், ஆகக் கூடிய வருமான வரி 16 சதவீதமே இருந்தது. அவற்றுக்கு மேலதிகமாக, வருடாந்த வருமானமாக ரூபாய் 25.5 மில்லியன் சம்பாதித்தவர்களுக்கு முன்னர் அறவிடப்பட்ட 12 சதவீத வட்டி 24 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மாதாந்த வருமானம் ரூபாய் 3 இலட்சத்துக்கு அதிகமான வருமானத்தை ஈட்டும், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தொழில்சார்ந்தோருக்கும் இது விசேட தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய உள்நாட்டு வருவாய் சட்டத்தின் ஊடாக, நேற்று முதல் அமுலில் இருக்கும் பிரதான வரியாக, மூலதன வரியே இருக்கும் என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. “யாராவது ஒருவர் தனக்கு உரித்துடைய, இரண்டாவது வீட்டை அல்லது காணியை விற்பனைச் செய்யும் போது, வீட்டை விற்பனைச் செய்யும் போது, வர்த்தக சந்தையில் இருக்கும் விற்பனை விலைக்கு மேலதிகமாக, முதலீட்டு வருமானமானத்திலிருந்து 10 சதவீத வரி அறவிடப்படும்” என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. ​“வெளிநாடுகளில் வேலைசெய்கின்ற தொழிலாளர்கள், இந்த நாட்டின் வங்கிகளில் வைப்பு செய்கின்ற பணத்தில், கணக்கு மீதியின் அடிப்படையில் நூற்றுக்கு 5 சதவீதம் வரி அறிவிடப்படும். அதேபோல, வெளிநாடுகளில் வேலைச்செய்வோர், தங்களுடைய வீட்டுக்கு அல்லது உறவினர்களுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு எந்தவிதமான வரியும் அறவிடப்படமாட்டாது” என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களின் வைப்புகளுக்கான வரி வருமானத்தில் 15 இலட்சம் ரூபாய் வரைக்குமான வரி விலக்களிக்கப்பட்டுள்ளது என்பதுடன், மிகுதிக்கு 5 சதவீதம் வரி ​அறவிடப்படும். “வரி நிவாரணம் மற்றும் வரிமுறிவுகளுக்காக நிதியமைச்சருக்கு இருந்த 200 சந்தர்ப்பங்கள் இல்லாதொழி க்கப்பட்டுள்ளமை, புதிய உள்நாட்டு வருவாய் சட்டத்தின் விசேட அம்சமாகும்” என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

No comments