Header Ads

test

ஊழல் குற்றச்சாட்டு! தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை!

ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  தென் கொரிய முன்னாள்  அரச தலைவர்  பார்க் குவென் ஹெக்கு 24 வருடங்கள் சிறை தண்டனையை   அந்த நாட்டு நீதிமன்றம் இன்று  விதித்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்த தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே-வுக்கு நேற்று வெள்ளிக்கிழமை 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

இதையடுத்து சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் நடைபெற்றது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, பார்க் கியூன் ஹே-வை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்தது செல்லும், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்ததன் மூலம் 2 கோடியே 30 லட்சம் வோன் (அமெரிக்க டாலர்களில் சுமார் 2 கோடியே பத்து லட்சம்) அதிகமான பணப்பலன்களை பார்க் கியூன் ஹே அடைந்ததாக விசாரணை மூலம் நிரூபணமானது.

இதையடுத்து, இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கிம் சே-யூன், குற்றவாளி பார்க் கியூன் ஹே-வுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடியே 80 லட்சம் வோன் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


No comments