Header Ads

test

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 336 வெளிநாட்டினர் நாடு கடத்தல்

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாடுகளைச் சேர்ந்த 336 பேர் அவர்களின் சொந்த நாட்டிற்கே நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பிலிப்பைன்ஸ், மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. 

இது தொடர்பாக பேசிய ஷாபா மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ரோட்ஸி சாத், “தற்காலிக தடுப்பு முகாமிலிருந்து பிலிப்பைன்சைச் சேர்ந்த 289 பேரும் (211 ஆண்கள், 53 பெண்கள், 25 குழந்தைகள்) ஏப்ரல் 11 மாலை படகு வழியாக பிலிப்பைன்ஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதே போல் இந்தோனேசியாவைச் சேர்ந்த 47 பேரும் (37 ஆண்கள், 10 பெண்கள்) படகு வழியாக இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 

ஷாபா மாநிலத்தைப் பொறுத்த வரையில் நான்கு வெவ்வேறு தற்காலிக தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக குடியேறிய 4,827 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இப்படி சிறை வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் வறுமையின் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருப்பதாக கருதப்படுகின்றது.

பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான-கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள்/வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர். அந்தக் குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்களும் நிகழ்கின்றன

32 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்டுள்ள மலேசியாவில் பதிவுச்செய்யப்பட்ட 2 மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதே 2 மில்லியன் அளவிலான பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் அல்லது சட்டவிரோதமாக பணியாற்ற குடியேறிய தொழிலாளர்கள் உள்ளது என கடந்த ஆண்டு அரசு-சாராத் தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்தன. 

இப்படி கைது செய்யப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என அஞ்சியது போலவே மலேசியாவின் முக்கிய மாநிலமான ஷாபாவில் பலர் கைது செய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். 

No comments