மேலாண்மை வாரியம் என்றாலும் சரி, ஸ்கீம் என்றாலும் சரி, அது ஒரு பெயர்தான். பெயரில் என்ன உள்ளது? மே 3-ந் தேதிக்குள் வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வோம் என்று மத்திய நீர்வளத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கூறினார். மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில், நீர் நிலைகளை தூய்மையாக பராமரிப்பது தொடர்பான 2 வார நிகழ்வு சமீபத்தில் டெல்லியில் நிறைவு பெற்றது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு டெல்லியில் நேற்று நடந்தது. அதில், மத்திய நீர்வளத்துறை இணை மந்திரிகள் அர்ஜூன் ராம் மேக்வால், டாக்டர் சத்தியபால் சிங், மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது காவிரி விவகாரம் குறித்து தமிழக செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். இதற்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கூறியதாவது:- காவிரி விவகாரத்தில் மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. வரைவு திட்டம், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் நடுவர் மன்ற தீர்ப்பை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எதையும் முடிவு செய்ய இயலாது. தமிழகமும், புதுச்சேரியும் காவிரி மேலாண்மை வாரியம் என்று அழைக்கின்றன. கர்நாடகம் ‘ஸ்கீம்’ என்று அழைக்கிறது. காவிரி நீர் பங்கீடு விஷயத்தில் அமைப்பின் பெயர் எதுவாகவும் இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழகம் அழைப்பதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். காவிரி நீர் திறப்பு தொடர்பான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதுவே, தற்போதைக்கு முக்கியம். அதுபற்றியே தற்போது பரிசீலனை நடந்து வருகிறது. ஜனவரி மாதம் வரை மட்டுமே தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்று நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு மத்திய அரசு ஏன் அனைத்து மாநில தலைமை செயலாளர்களையும் அழைத்து ஆலோசனை கேட்டது என்றால், மத்திய அரசு இந்த பிரச்சினையை கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அணுகி உள்ளது. நாளை காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது வேறு அமைப்போ ஏற்படுத்தப்பட்டாலும் அந்த அமைப்பு எடுக்கும் முடிவுக்கு அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது. எனவேதான் 4 மாநிலங்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. காவிரி விவகாரத்தை அந்தந்த மாநிலங்கள் அவற்றின் நோக்கில் அணுகுகின்றன. ஆனால் மத்திய அரசு இதை கூட்டாட்சி அடிப்படையில் அணுகுகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஒரு சரியான அமைப்பை உருவாக்க மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. வரைவு செயல்திட்டத்தை மே 3-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு பிறகு அந்த அமைப்பு இறுதி வடிவம் எடுக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பதை நாங்கள் உறுதியாக கூற முடியாது. ஆனால் அந்த வரைவு செயல்திட்டத்தின் மீது நீண்ட நாட்கள் வாதங்கள் நடைபெறாது என்பதையும் கோர்ட்டு அடிக்கோடிட்டு உள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்யும் வரைவு செயல்திட்டத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டு ஏதாவது திருத்தங்கள் செய்யுமாறு உத்தரவிட்டால் சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் எந்த திருத்தமும் கூறப்படவில்லை என்றால் உடனடியாக அது அரசாணையாக அறிவிக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது மத்திய அரசு. எனவே, கோர்ட்டு வரையறுத்துள்ள நேரத்துக்குள் வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு உபேந்திர பிரசாத் சிங் கூறினார். இணை மந்திரி மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாவது:- மோடி அரசு, ஒரு பொறுப்பான அரசு என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது. அப்படி ஆக்கப்படக்கூடாது. பல ஆண்டுகள் பழமையான இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரும்புகிறோம். வரைவு திட்டம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 4 மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் நீர்வளத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். எத்தகைய செயல் திட்டத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்று கருத்து கேட்டுள்ளோம். புதிய அமைப்புக்கு தொழில்நுட்ப வல்லுநர், சட்ட வல்லுநர், அதிகாரி ஆகியோரில் யாரை தலைவராக நியமிக்கலாம் என்று கருத்து கேட்டுள்ளோம். கூட்டாட்சி முறையில், மாநிலங்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த வேண்டி உள்ளது.
Post a Comment