1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, கொழும்புடன் இணைக்கும் நிலத்தடி சுரங்க வீதி வலையமைப்பில் 800 மில்லியன் டொலரை சீன நிறுவனம் ஒன்று முதலீடு செய்யவுள்ளது. கடலுக்குள் சீன நிறுவனத்தினால் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, பிரதான நகருடன் இணைக்கும் சுரங்க வீதி வலையமைப்புகள் அமைக்கப்படவுள்ளன. இந்த வீதி வலையமைப்பு திட்டத்தில் 800 மில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கு சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த திட்டத்துக்கான உடன்பாடு ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலம் தொடர்பான சட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னர், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 269 ஏக்கர் பரப்பளவில் துறைமுக நகருக்காக கடலுக்குள் நிலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 60 வீதத்துக்கும் அதிகமானளவு நிலப்பகுதி ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டுக்குள் நிலத்தை மீட்கும் பணிகள் முடிந்து விடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment