நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான வாக்கெடுப்பின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனரென செய்தி வெளியாகியுள்ளது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலைய மக்கள் முன்னணியைச் சேர்ந்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் தலைமையின் கீழ் செயற்படும் நுவரெலாய மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எம்.திலகராஜ் ஆகியோரே, பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த பின்னர், அமைச்சர் பதவியிலிருந்து தான் இராஜினாமாச் செய்யப் போவதாக, அமைச்சர் திகாம்பரம் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளாரென அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர், தனக்கெதிராக பல்வேறான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதுவே, தன்னுடைய இராஜினாமாவுக்கு காரணமென, அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளாரென அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில், நுவரெலியா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, “எங்களுடைய கூட்டணியின் கருத்து, தங்களது தேவைக்கேற்ப திரிபுபடுத்தப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது, எங்களுடைய கூட்டணிக்கு நம்பிக்கையிருக்கிறது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நம்பிக்கையில்லை” என்றார்
Post a Comment