Header Ads

test

வங்கதேசத்தில் ரோஹிங்கியாக்கள் தஞ்சமடைவது பாதுகாப்பு சவாலாக உருவாகியுள்ளது: இந்திய தரப்பு

மியான்மரிலிருந்து வங்கதேசத்தில் ரோஹிங்கியாக்கள் தஞ்சமடைவது  ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொதுவான பாதுகாப்பு சவாலாக உருவெடுத்துள்ளதாக வங்கதேசத்திற்கான இந்திய உயர் ஆணையர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2017-ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைக் காரணமாக வங்கதேசத்தில் சுமார் 7 லட்சம் அகதிகள் தஞ்சமடைந்தனர். இது வங்கதேசத்திற்கு கடுமையான அழுத்தங்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உண்டாக்கிய நிலையில், நாடு திரும்ப விரும்பும் ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது என மியான்மர்- வங்கதேசம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதற்கு ரோஹிங்கியா அகதிகள் மறுப்பு தெரிவித்திருந்த போதிலும் திருப்பி அனுப்பும் பணிகள் ஜனவரி 2018 முதல் தொடங்கப்படும் என இருநாடுகளும் முடிவெடுத்திருந்தன. அந்த வகையில், இதுவரை ஒரு குடும்பம் மட்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வது மீண்டும் தொடங்கியுள்ளது. அதே போல், சில தினங்களுக்கு முன் வங்கதேசத்திலிருந்து திரிபுரா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக 18 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, இந்திய உயர் ஆணையர் தெரிவித்த கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த சூழலை கண்காணிக்கும் விதமாக வங்கதேசத்துடன் எல்லையைக் கொண்டிருக்கும் மேற்கு வங்காளம்(2,216 கிமீ), திரிபுரா(856 கிமீ), மேகாலயா(443 கிமீ), மிசோரம்(318 கிமீ), அசாம்(263 கிமீ) உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments