அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தரைப்படையை ( US Land Forces ) சேர்ந்த 17 அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்கா வந்துள்ளது. தரைப்படைகள் பசுபிக் திட்ட அமர்வுகளில் பங்கேற்கவே இந்தக் குழு கொழும்பு வந்துள்ளது. இந்தக் குழுவுக்கு, அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளை பீடத்தின் வடக்குப் பகுதி பிரதி கட்டளை தளபதியான அவுஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபிள் தலைமை வகிக்கிறார்.
மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபிள் மற்றும் மூன்று அதிகாரிகள் நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தலைமை அதிகாரி டம்பத் பெர்னான்டோவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதையடுத்து, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்த பூர்வாங்க கலந்துரையாடலில், அமெரிக்க தரைப் படைக் குழுவினர் பங்கேற்றனர். இந்தக் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் ரோஜர், நிபுணத்தவ ஆற்றல் தொடர்பாகவும், அமெரிக்க பங்காளர் ஐந்தாண்டு திட்டம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் தொடர்புடைய இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.
அத்துடன், பரஸ்பர நலன் மற்றும் கரிசனைக்குரிய பிராந்திய மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் மேஜர் ஜெனரல்கள் டம்பத் பெர்னான்டோ, தனஞ்ஜித் கருணாரத்ன, அருண வன்னியாராச்சி, மேர்வின் பெரேரா, மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment