Header Ads

test

சிரியா மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் மே! குற்றம் சுமத்தும் கோர்பின்

சிரியாவில், இரசாயன ஆய்வுகூடம் எனக் கூறப்படும் இடம் மீது தாக்குதல் நடத்துவதற்கு, நாடாளுமன்ற அனுமதியை, பிரதமர் தெரேசா மே பெற்றிருக்க வேண்டுமா என்பது தொடர்பாக, ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில், இரு தரப்புகளும் கடுமையான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டன.

சிரியா மீது, ஐக்கிய அமெரிக்காவுடனும் பிரான்ஸுடனும் இணைந்து தாக்குதல் நடத்துவதற்கான முடிவை, நாடாளுமன்றத்தின் அங்கிகாரமின்றி, பிரதமர் மே எடுத்தமை தவறு என்பது, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் குற்றச்சாட்டாகும்.

அது தொடர்பான கேள்விகளை எதிர்கொண்ட பிரதமர் மே, தனது முடிவை நியாயப்படுத்தியதோடு, அது தொடர்பான முடிவை, விரைவாக எடுக்க வேண்டியிருந்தது எனக் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 7ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, நச்சுவாயுத் தாக்குதல் எனக் குறிப்பிட்ட அவர், அதன் பின்னால், சிரிய அரசாங்கமே காணப்படுகிறது என்பதில் தனக்குச் சந்தேகம் கிடையாது எனவும், தேசிய நலனைக் கருத்திற் கொண்டே தான் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இம்முறை, நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெறுவது தொடர்பில் விமர்சனங்கள் ஒருபக்கமாக இருக்க, எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படுமாயின், அதற்கான அங்கிகாரத்தை அவர் பெறுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், அதற்கான நேரடியான பதிலை, பிரதமர் வழங்கியிருக்கவில்லை.

மறுபக்கமாக, கடுமையான விமர்சனங்களை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பின், நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெறாமை தவறானது எனக் குறிப்பிட்டதோடு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பணிப்புரைகளையே, ஐ.இராச்சியப் பிரதமர் மே, கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

கடந்தாண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தனது பெரும்பான்மையை இழந்த பிரதமர் மே, சிறு கட்சிகளின் துணையுடனே, ஆட்சியமைத்து வருகிறார். அதனால், கடுமையான அழுத்தங்களுக்கு அவர் உள்ளாகியுள்ள போதிலும், ரஷ்யாவை எதிர்க்கும் அண்மைக்கால முடிவு காரணமாக, சர்வதேச ரீதியில் சிறந்த ஆதரவை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments