வன்னியில் சிவில் பாதுகாப்புப் படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று இராணுவ சீருடையுடன் முல்லைத்தீவு – தேராவிலில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமுக்கு வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் முடிவுக்கு வந்த பின்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வன்னியில் உள்ள முன்பள்ளிகளை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இங்கு கற்கும் மாணவர்களுக்கு சிவில் பாதுகாப்பு படையின் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடைகளே வழங்கப்படுகின்றன. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, சிவில் பாதுகாப்பு படையே ஊதியம் வழங்கி வருகிறது. படைக் கட்டுப்பாட்டில் உள்ள முன்பள்ளிகளை மீட்பதற்கு வடக்கு மாகாணசபை இன்னமும் நடவடிக்கை எடுக்காத நிலையில், சிவில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ள முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இவர்களுக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி தேராவில் இராணுவ முகாமில் வழங்கப்படவுள்ளது. இதற்காக இவர்களுக்கு இராணுவ சீருடைகள் வழங்கப்பட்டு இன்று முகாமுக்கு வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாம் முன்பள்ளிகளில் இணைந்த போது, இராணுவப் பயிற்சி ஏதும் அளிக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டதாகவும், இப்போது தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் இராணுவப் பயிற்சிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாங்கள் பயிற்சிக்கு செல்லாவிடின், வேலையை இழக்க நேரிடும். இந்த நிலையில் நாங்கள் எங்கே செல்வது? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment