அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி, கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து, கருணை மனு ஒன்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில், இம்மாணவர்களின் தந்தையை விடுவிக்குமாறு வலியுறுத்தி, சுமார் 2,500க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் இடப்பட்ட மகஜரை பாடசாலை சமூகம் அனுப்பி வைத்துள்ளது. குறித்த மகஜரை, பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளரிடம் கையளித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அதிபர், தங்களது பாடசாலையில் கல்வி கற்றுவரும் ஆனந்த சுதாகரின் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகள், கடந்த காலங்களை விட, தற்போது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் கல்வி கற்க விருப்பமற்றவர்களாகவும் அதிக யோசனையில் இருந்து கொண்டு, தனிமையை விரும்புபவர்களாகவும் மாறி வருகின்றனர் என்றும் அவர் கூறினார். இதை ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே, பாடசாலை சமூகம் இணைந்து, ஆனந்த சுதாகரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளர், இந்த மாணவர்களைப் போன்று, கடந்த கால யுத்தகாலத்தில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் எனினும், நல்லாட்சி அரசாங்கத்தின் போது, இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.
இதற்காக, சுமார் 3 இலட்சத்துக்கும் அதிக கையெழுத்துக்களை, கல்வி சமூகம் சார்பில் பெற்று வடமாகாண கல்வி அமைச்சினூடாக, வடமாகாண ஆளுநர், ஐக்கிய நாடுகள் சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு, அகிம்சை வழியில் மகஜரை அனுப்பவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
Post a Comment