உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபியின் ஆதரவைக் கோரியதற்கு ஆதாரம் இருந்தால் அதனை வெளியிடுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுத்துள்ளார் ரெலோவின் செயலாளர் ந.சிறீகாந்தா. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கேட்டு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் ஆகியோர் பல தடவைகள் ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் பேசியிருந்தனா். இது சம்பந்தமான ஆதாரங்களை நாம் வௌியிடத் தயாா் என்று ஈபிடிபியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளா் தெரிவித்தார் என்று ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறீகாந்தா, ‘‘ஆதாரங்கள் இருப்பின் அவற்றை எந்த தயக்கமும் இன்றி வௌியிடுங்கள் இதனை நாங்கள் பகிரங்கமாகவே கோருகின்றோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணிது எந்தவொரு சபைகளிலும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதற்காக அவா்கள் உத்தமர்களோ, மகாத்மாக்களோ அல்ல. அவா்களுடைய தோல் விரைவில் உரிக்கப்படும். அப்போது அனைத்தும் தெரியவரும். உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்கக் கூட்டமைப்பு ஆதரவு கோரியிருந்ததாக ஈ.பி.டீ.பி. சாா்ந்தவா்கள் தொிவித்திருந்தனா். நாங்கள் அதனை ஆதரவு என்று கூறவில்லை. மாறாக ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அந்தக் கட்சியுடன் கலந்துரையாடினோம். சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருக்கும் கட்சிகளே அந்தந்தச் சபைகளில் ஆட்சியமைப்பது, அதற்கு மற்றைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவது என்ற நோக்கிலே கலந்துரையாடப்பட்டது. இது எந்த வகையிலும் ‘டீல்’ ஆகிவிடாது, அத்துடன் அத்தகைய ‘டீல்’ அரசியல் தமிழ் கூட்டமைப்பின் அகராதியிலே இல்லை. மேலும் டக்ளஸ் தேவானந்தா உட்பட்டவா்களுடன் பேசியது ரேலோவே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பல்ல – என்றார்.
Post a Comment