த.தே.கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
இன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது, நாளையதினம் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் ஒன்று கூடி கலந்துரையாடவிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அதேநேரம், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடக்கும் இறுதி தருணத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமக்கு இந்த தகவலை வழங்கினார்.
இதேவேளை, கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று, அதன் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில், தமது கட்சியில் நிலவும் உட்பூசல்களை தீர்த்து, சுதந்திர கட்சிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளையும் கலைந்து நல்லாட்சி தொடர வேண்டும்.
அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால், தமிழ் மக்களது நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அழுத்தங்களை தங்களால் வழங்க முடியும்.
குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இன்று மாலை கூடுகிறது.
இதன்போதும், பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலேயே ஆராயப்படவுள்ளது
Post a Comment