சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரையைத் தோற்கடித்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் புதிய வியூகம் ஒன்றை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வகுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தின் அமர்வுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடக்கி வைத்துள்ளார். மே 8ஆம் நாள் மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்கி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிறிலங்கா அதிபர் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தினால், அதனைச் சபையில் தோற்கடிக்க கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று திட்டமிட்டுள்ளது. அவ்வாறு கொள்கை விளக்க உரை தோற்கடிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை நடத்தும் நிலைக்கு சிறிலங்கா அதிபர் தள்ளப்படுவார். அரசியலமைப்பின் 48 ஆவது பிரிவுக்கு அமைய, அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை தோற்கடிக்கப்பட்டால், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment