வடமாகாணசபை:நிர்வாகத்தை குழப்பியடிக்கும் ஆளுநர்!
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்விடயத்தில் வடமாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று முரண்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் சந்திப்பிலிருந்து அவர் வெளியேறியுள்ளார்.
வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநர் முதலமைச்சரை தவிர்த்து அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட தரப்புக்களினது கருத்துக்களின் அடிப்படையில் செயற்பட்டுவருகின்றார்.
இந்நிலையிலேயே பதில் முதலமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனிற்கும் ஆளுருக்குமிடையே இன்று காலை சந்திப்பு நடந்துள்ளது.
இதன்போது, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகனதாஸ் மாற்றப்படுவதுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக ஆளணிகள் பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாகவிருக்கும் சிவபாதசுந்தரம் மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாண ஆளணி பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக தெய்வேந்திரன் நியமிக்கப்படுவார் என்று ஆளுநரால் பதில் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தை ஏற்க மறுத்த பதில் முதலமைச்சர், தம்மால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே செயலாளர்களாக நியமிக்க முடியும் என முரண்பட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் இருக்கும் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்த நியமனங்கள் தொடர்பில் சர்வேஸ்வரன் கலந்துரையாடியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரன் நியமிக்கப்படாவிடின், அனைத்து நியமனங்களையும் உடன் நிறுத்துமாறு முதலமைச்சர் தொலைபேசியிலேயே கேட்டுக்கொண்டுள்ளார்.
அதனையடுத்து, ஆளுநரால் இன்று வழங்கப்படவிருந்த செயலாளர் மாற்றங்களை நிறுத்தி வைக்குமாறு பதில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன் காரணமாக மாற்றல் கடிதங்களை வழங்குவதை ஆளுநர் பிற்போட்டுள்ளார். இதேவேளை, தெய்வேந்திரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து ஆளுநரின் பணிப்பில் அவர் அதிகாரங்கள் அற்ற பேரவை செயலக செயலாளர் பதவி நிலையில் தற்போது உள்ளார்.அங்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமே அனைத்தையும் ஆட்டுவிப்பவராக உள்ளார். அவர் தன்னிடம் பணியாற்றும் தெய்வேந்திரனிற்கு புதிய பதவி கிடைப்பதை தடுக்கின்றாராவென்ற சந்தேகம் அதிகாரிகள் மட்டத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
Post a Comment