சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 கோரிக்கைகளை முன்வைத்து அவருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தது. இதற்கு அளிக்கப்படும் பதிலைப் பொறுத்தே, தாம் முடிவெடுக்கவுள்ளதாகவும் கூட்டமைப்பு கூறியிருந்தது. வாக்கெடுப்பு முடிந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், 10 கோரிக்கைகளை பிரதமர் ரணில் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறியிருந்தார். இந்தநிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அத்தகைய எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை என்றும், அவ்வாறு வெளியான செய்திகள் தவறானவை என்றும் கூறினார். 2015இல் மக்கள் அளித்த ஆணையை நிறைவேற்றுவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ள கூட்டு அரசாங்கம் கவிழ்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரணமாக இருந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment