முல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியா நோய் பரவும் சாத்தியங்கள் அதிகளவில் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தி சுகாதாரத் திணைக்களப் பணிமனை மண்டபத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “இலங்கையில், மலேரியா நோய்க்காவி நுளம்புகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டாலும், அது முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற குளங்கள், ஆறுகள், நீர் ஓடைகளிலேயே, மலேரியாவைப் பரப்பக்கூடிய அனோபிளிஸ் நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து, இந்தியாவுக்குச் சென்று வரும் மக்களின் அளவு அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்றால், அதற்குரிய தடுப்பு மருந்துகளை ஏற்றிக் கொள்ளலாம். மக்கள் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால், தடுப்பு மருந்தை எடுக்க வேண்டும்” என, அவர் வலியுறுத்தினார்.
Post a Comment