ஈபிடிபிக்கு வேண்டுமென்றே அடித்தோம்: சிறீகாந்தா!
வேலணை கரவெட்டி பிரதேச சபைகளில் கூட்டமைப்பிற்கு எதிராக ஈ.பி.டி.பி செயற்பட்ட காரணத்தினாலேயே நெடுந்தீவு பிரதேச சபையினை கைப்பற்றி ஈ.பி.டி.பிக்கு பதிலடியுடன் கூடிய அதிர்ச்சி கொடுத்தோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளரும் சட்டத்தரணியுமான ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதாக இருந்த வேலணை பிரதேச சபையில் நடைபெற்ற ஆட்சி அமைப்பின் போது ஈ.பி.டி.பி சிங்கள கட்சியுடன் இணைந்து ஆட்சியினை தனதாக்கிக் கொண்டது. மேலும் கரவெட்டி பிரதேச சபையின் ஆட்சி அமைப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் பிரேரிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தாமும் தவிசாளர் ஒருவரை பிரேரித்து போட்டியிட்ட போது ஈ.பி.டி.பி கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்காமல் சிங்கள கட்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தது.
கூட்டமைப்புக்கும் ஈ.பி.டி.பி கட்சிக்கும் எட்டப்பட்ட பொது கொள்கை வேலணை பிரதேச சபை ஆட்சி அமைப்பின் போது சிதறடிக்கப்பட்டது. பின்னர் கரவெட்டி ஆட்சி அமைப்பின் போது அக் கொள்கை சுக்குநூறாக தகர்க்கப்பட்டது. இதனாலேயே நாங்கள் ஈ.பி.டி.பி கட்சிக்கு பாடம் புகட்ட அவர்கள் அதிக ஆசனங்களை பெற்ற நெடுந்தீவு சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது.
நெடுந்தீவு பிரதேச சபையினை கூட்டமைப்பு கைப்பற்றத் தேவையில்லை என்றும் அது ஒரு சிறிய சபை குறைந்த மக்களைக் கொண்டது. அதனை ஈ.பி.டி.பி கட்சிக்கு விட்டுக் கொடுப்போம் என்று கூட்டமைப்பில் இருந்த சிலர் கூறினார்கள்.
ஆனால் தவறிழைத்த ஈ.பி.டி.பி கட்சிக்கு நெடுந்தீவினை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் கூட்டமைப்பு தெளிவாக இருந்தது. இதனால்தான் ஈ.பி.டி.பிக்கு நெடுந்தீவில் அதிர்ச்சியை கொடுத்தோம். ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் யாரையும் குற்றம் சுமத்த முடியாது என்றார்.
Post a Comment