மன்னார் பிரதேச சபை தேர்தலின் போது தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக தாழ்வுபாடு 9 ஆம் வட்டார விகிதாசார பிரதி நிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினரான செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளைக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியுறுத்தி ஜோசப்வாஸ் நகர் அமைப்புக்களின் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்ட அவசர கடிதம் இன்று (18) புதன் கிழமை தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,, கடந்த 10-02-2018 அன்று இடம் பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக மன்னார் பிரதேச சபை தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக தாழ்வுபாடு 9 ஆம் வட்டாரத்தில் வேட்பாளராக அறிமுகமான ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை எமது கிராமத்தின் அனைத்து அமைப்புக்களையும் சந்தித்து தனக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். -இவர் மீது அமைப்புக்கள் கொண்டிருந்த நன் மதிப்பின் காரணமாகவும்,இவர் எம் அமைப்புக்களின் அமைப்பு ஒன்றியத்திற்கு தந்துள்ள கடிதத்தின் உறுதிமொழிக்கு அமைவாகவும் எமது கிராமத்தில் பெரும்பான்மையான வாக்குகளை இவருக்கு அளித்தோம். -தேர்தல் முடிவில் இவர் சில வாக்குகளினால் தோல்வி அடைந்த போதும்,எமது அமைப்பின் பிரதி நிதிகள் சிலர் இவரோடு இணைந்து தங்கள் கட்சியின் மன்னார் பகுதி இணைப்பாளரிடம் விகிதாசார பிரதி நிதித்துவத்தை கேட்டிருந்தோம். -எமது கோரிக்கைக்கு அமைவாக குறித்த விகிதாசார பிரதி நிதித்துவத்தை எமக்கு வழங்கியமைக்கு எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம். -இந்த நிலையில் விகிதாசார பிரதி நிதித்துவம் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளையை மன்னார் பிரதேச சபை தலைவர்,உப தலைவர் தெரிவுகளின் போது எந்தக்கட்சியும் சாராமல் வாக்கெடுப்பில் நடு நிலமை வகிக்க தங்கள் கட்சி வேண்டிக்கொண்டதாக எமக்கு வாய் மொழியாக கூறியிருந்தார்கள். -அதனையும் எமது கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் பிரதேச சபைக்கான தலைவர்,உப தலைவர் தெரிவுகள் இடம் பெற்றது. இதன் போது உறுப்பினர் செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை எமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்தமையானது அவரது சுய விருப்பத்தினாலேயே தவிர அவ் வாக்களிப்பிற்கும்,எமது கிராம மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
மேலும் ஊடகங்கள் ஊடாகவும்,எமது கிராம மக்களின் கருத்து களுக்கு அமைவாகவும் இவர் ஐக்கிய தேசியக்கட்சியிடம் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளி வருவது எமது கிராமத்தையும்,எமது அமைப்புக்களையும் இழிவு படுத்துவதாக கருதுகின்றோம். இதே எண்ணக்கருவோடு இவரை நோக்கும் போது இவரையும்,இவர் மூலமாக எமது கிராமம் பெறப்போகும் அபிவிருத்திகளையும் தேவையற்றதாகவும்,இழிவானதாகவும் கருதுகின்றோம். -இவரின் செயற்பாடுகள் குறித்து எம் அமைப்புக்களின் அமைப்பு ஒன்றியம் கடந்த 12 ஆம் திகதி உறுப்பினர் செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளையுடன் கலந்துரையாடிய போது இவரால் நம்பத் தகுந்த நியாயமான கருத்து எதுவும் முன் வைக்கப்படவில்லை. எனவே இவர் தொடர்பாக தங்களுடைய கட்சி எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எமது கிராமமும் எம் அமைப்புக்களின் அமைப்பு ஒன்றியமும் பொறுப்பற்றது என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment