தியாகதீபம் திலீபனின் தூபி மீளக் கட்டியெழுப்பப்படவுள்ளது!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் இ.ஆனோல்ட் தலைமையில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், பொறியியலாளர் ஆகியோர் இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபியை நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
இலங்கைக்கு அமைதிப்படையாக வந்திறங்கிய இந்தியா, ஆக்கிரமிப்புப் படையாக மாறியது. இந்திய தேசத்துக்கு எதிராக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தியாக தீபம் திலீபன் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14ஆம் திகதி உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 12 நாள்கள் குடிதண்ணீர் உள்ளிட்ட எந்தவொரு ஆகாரமும் இன்றி அகிம்சை வழியில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தார். செப்ரெம்பர் 26ஆம் திகதி, வீரச்சாவடைந்திருந்தார்.
தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி, நல்லூர் கோயில் பின் வீதியில் அமைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் நினைவுத் தூபி இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டது.
2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் அதே இடத்தில் 23 அடி உயரமான தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி மீளவும் அமைக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு, ஏ-9 வீதி மூடப்பட்ட பின்னர், ஊரடங்கு நேரத்தில் நினைவுத் தூபி மீளவும் இடித்தழிக்கப்பட்டது.
நினைவுத் தூபி மீளக் கட்டியெழுப்பப்படும் என்று வடக்கு மாகாண சபை கடந்த ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றியிருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது நடவடிக்கையாக, நினைவுத் தூபியை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இ.ஆனோல்ட், துணைமேயர் து.ஈசன், மாநகர சபை உறுப்பினர்களான ப.தர்சானந்த், ந.லோகதயாளன், யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், மாநகர சபை பொறியியலாளர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் நினைவுத் தூபியை நேற்றுப் பார்வையிட்டனர்
Post a Comment