Header Ads

test

போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்


“ஒரு செய்தியாளனாக அன்றைக்கு நான் தோத்துப்போனன்" என்ற நெருடல் இன்றைக்கும் இருக்கிறது”

“மோகன் அண்ணையை இரண்டு நாட்களாக காணவில்லை. வேலைக்கும் வரவில்லை. நானும் அன்ரனியும் அவரைத் தேடி வீட்டிற்கு போனோம்.” அவர் அங்கு இல்லையென்பதையும் கடற்கரைக்கு போய்ட்டார் என்றும் அவரது மனைவி தெரிவித்திருந்தார். “நான் வழமையாக அவர் வீட்டிற்கு போனா அவர் பிள்ளையை தூக்குவன்”, அன்றும் தூக்குவம் என்று நினைத்து   “மகள் எங்க கூப்பிடுங்க அக்கா” என்று சொன்னவுடன் அழ ஆரம்பித்துவிட்டார். “முந்தநாள் என்ர பிள்ளையை பறிகொடுத்திடனே” என்று அழுதது இன்றும் நினைவில் வந்து செல்கிறது.
மோகன் அண்ணையை தேடி கடற்கரைக்கு போனோம். அங்கே மகளைப்புதைத்த இடத்தில் மோகன் அழுதுகொண்டு இருந்தார். அந்த சமயத்தில் எங்களால் ஆறுதல் எதனையும் சொல்லமுடியவில்லை. நாங்களும் அவ்விடத்தில் அமர்ந்து விட்டோம்..
பின்னர் மோகன் அண்ணை கூட்டிக்கொண்டு ஈழநாதம் அச்சு இயந்திரங்கள் வைத்திருந்த பகுதிக்கு வந்திருந்தோம்.

மோகன் அண்ணை மிகவும் முக்கியமானவராக இருந்தார். கணனி மற்றும் அச்சு இயந்திரங்களை பழுதுபார்ப்பதில் சிறப்புச்தேர்ச்சி கொண்டவர். அவர் இல்லாமல் பத்திரிகையை வெளியிடமுடியாது என்று எங்களுக்கு தெரியும். அவரே தன் மனதை தேற்றிக்கொண்டு மூன்றாவது நாள் பணியினை மீண்டும் ஆரம்பித்து விட்டார். 

இதுதான் அவரின் வலிசுமந்த வலிமைபெற்ற வாழ்க்கை.

நான்,ஜெகன், மோகன் அண்ணை, சுகந்தன் அண்ணை, அன்ரனி, தர்சன்,  ஆறு பேரும் ஒவ்வொரு இரவும் ஒன்றாக இருந்து கதைத்துக்கொண்டிருப்போம். சண்டை தொடங்க முதல் இப்படி நாங்கள் கதைப்பதில்லை. ஏனென்றால் தர்சன் கணனிப்பிரிவு, சுகந்தன் அண்ணை இயந்திரப்பிரிவு நான் செய்தியாளர் பிரிவு, மோகன் இயந்திரம் மற்றும் முகாமைத்துவப்பிரிவு, ஜெகன் தொடர்பாடல் பிரிவு வேறுபட்ட பணிகளில் இருந்தபடியால் நாங்கள் தொடர்ச்சியாக கதைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அன்ரனியும் நானும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அன்ரனியுடன் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன்.

ஏப்பிரல் 25 அன்று காலை மோகன் அண்ணையும் சுகந்தன் அண்ணையும் என்னை எதிர்பார்த்து காத்திருந்தனர். நான் அச்சு இயந்திரங்கள் இருந்து இடத்திற்கு சென்றவுடன் சங்கீதன் அண்ணை “ எங்க சுரேன் இன்றைக்கு போறிங்கள்” என்று கேட்டார். நான் “வலைஞர்மடம்” என்று சொன்னவுடன் “சரி இவர்களோடு நீங்களும் போங்கோ” என்று சொல்லித்தான் நான் போனேன்.

சுகந்தன் அண்ணைக்கு அன்று வருத்தம். வருத்தோடு தான் எங்களோட வந்தவர்.

ஒரு செய்தியாளர் என்றால் “எங்கே ஆமிக்காரன் நிக்கிறான் என்று உண்மையில தெரிந்திருக்கவேண்டும். அன்று நான் யாரோடும் கதைக்கவில்லை. காலை நேரம்  என்றபடியால் எனக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. “ஆமி முன்னேறி வந்தது தெரிந்திருந்தால் அவ்விடத்திற்கு நாங்கள் சென்றிருக்கமாட்டம்.” ஒரு செய்தியாளனாக அன்றைக்கு நான் தோத்துப்போய்விட்டன் என்ற நெருடல் இன்றைக்கும் இருக்கிறது.

ஒரு உயிரை இழக்கிறது என்றது ஏற்றுக்கொள்ளமுடியாதென்றாலும் எங்களால் தடுக்கமுடியாது என்பது தெரியும்.

9.30 மணியிருக்கும், சுகந்தன் அண்ணையின் தலை சிதறுவதை என்ர கண்ணால பார்க்கும் போது “வதனி அக்கா மூன்று பிள்ளைகளோட இனி செய்யப்போறா” என்று நினைத்துக்கொண்டே நான் கடற்கரையில் படுத்துவிட்டேன். “சுகந்தனை விட்டிட்டு சுரேனை தூக்கி வந்திட்டாங்கள் என்று வதனி அக்கா இப்பவும் நினைப்பா… என்று நினைக்கிறன். அன்றைக்கு நான் தப்பி வந்திருக்கலாம். ஆமி கிட்ட நிக்கிறான் என்று தெரிஞ்சும் நான் அவரை தூக்கப்போனான். எனக்கு நெஞ்சில வெடி. என்னால மூன்று மீற்றரில் இருக்கின்ற சுகந்தன் அண்ணை தொடக்கூடமுடியவில்லை.

…………

எறிகணைகள் வீழ்ந்த இடங்களில் நான் படம் எடுக்கும் போது, “ நீங்கள் இரத்தம்  கக்கி சாவிங்களடா” என்று மக்கள் திட்டுவார்கள். மக்களும் பாவம் அவர்களுக்கும் பசி ஒருபக்கம்,  இருக்க இடம் இல்லாதது இன்னொரு பக்கம், தங்களது உறவுகளை இழப்பது மறுப்பக்கமாக இருக்கும் போது எல்லா திட்டுக்களையும் நான் ஏற்றுக்கொள்வதில் என்ர மனசு தயாராக இருந்திருந்தது.
…………

“நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டு இருந்தது. கடற்கரை மணல் எடுத்து நெஞ்சில அடைத்தேன். அதன் பிறகுதான் அப்படியே மூக்காலயும் வாயாலயும் இரத்தம் வந்தபடியே மயங்கிவிட்டேன். 
மிகுதி அடுத்த பதிவில்….

புகைப்படம் 01 எனக்கு முக்காலயும் வாயாலயும் இரத்தம் வருவதைக் காணலாம்.
புகைப்படம் -02 சுகந்தன் அண்ணை காயமடைந்தவர்களை தூக்கும் போது எடுத்திருந்தேன்.

வன்னி யுத்த கால ஊடகவியலாளர் -சுரேஷ் பதிவுகள்

No comments