பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை
நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடத்தினால் பரிந்துரைக்கப்பட்டு, செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பதவி மாற்றங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சற்றும் திருப்தியடைய முடியாதிருப்பதாக, பெரும்பாலான பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது.
இந்தநிலையில் அடுத்தக்கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இன்று கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவாத்தை நடத்த இன்றைய கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருப்பதாக, ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சென்றிருந்த அவர் நாடுதிரும்பியப் பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தப் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
மறுசீரமைப்பு என்ற பெயரில் சிறிய விடயங்களை மாத்திரம் மேற்கொண்டு தனிநபர்களை அல்லது சிறுகுழுக்களை பாதுகாக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அவ்வாறு செயற்பட்டால் கட்சி கடுமையாக பாதிக்கப்படும்.
ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.
இந்தவிடயத்தில் தீர்மானமிக்க முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
புற்றுநோயை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காமல், அதற்கு பதிலாக தடிமனுக்கு சிகிச்சையளிப்பது நிவாரணமாகாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment