சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஐதேக நாடாளுமன்றக் குழுவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், ஐதேக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். நாளை விவாதிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இந்தச் சந்திப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும், இந்தக் கூட்டங்கள் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் நிறைவு பெற்றதாகவும், இன்று காலை 9.30 மணியளவில் மீண்டும் ஐதேகவினரைச் சந்திக்க வருமாறு சிறிலங்கா அதிபர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை ஆக்கபூர்வமான திட்டத்துடன் வருமாறு ஐதேகவினரிடம் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். இன்று ஐதேக நாடாளுமன்றக் குழுவைச் சந்திக்கும் போது, தமது நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்தால், நடைமுறைப்படுத்துவதற்கான 18 மாத அபிவிருத்தி திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிபரிடம் ஐதேக நேற்று சமர்ப்பித்துள்ளது.
Post a Comment