Header Ads

test

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மீறல்களை அம்பலப்படுத்தும் ஜஸ்மின் சூகாவின் அறிக்கை

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை ஒன்றை ஜஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மூத்த அதிகாரி  ஒருவர், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இவர்கள் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல், ஐ.நா அமைதிப் படை நடவடிக்கைத் திணைக்களம், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் கிழக்குப் பகுதியில் 2006-2007 காலப் பகுதியில், தமிழர்களை படுகொலை செய்வதற்க உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர், தற்போது, ஆபிரிக்க நாடு ஒன்றில், ஐ.நா அமைதிப்படையில் கண்காணிப்பாளராக பணியாற்றுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதற்கான ஐ.நாவின் ஆய்வு முறைகளில் இன்னமும் குறைபாடுகள் இருப்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையில், தமிழர்கள் கடத்தப்பட்டு சிறப்பு அதிரடிப்படையினரால் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டனர் என்பது பற்றிய, உள்ளக வாக்குமூலங்களும் இடம்பெற்றுள்ளன.

No comments