தடுப்பிலுள்ளவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தல், கொலைசெய்தல், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தல், வெள்ளைவான் கடத்தல் போன்றவற்றிற்கான கட்டளைகள் விசேட அதிரடிப்படையின் முக்கிய அதிகாரிகளிடமிருந்தே கிடைத்ததென, விசேட அதிரடிப்படையில் முன்னர் பணியாற்றிய படையினர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். பிரித்தானிய நாடாளுமன்றில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்திற்கான அமைப்பு குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. விசேட அதிரடிப்படையில் முன்னர் பணியாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த படையினர் மற்றும் அவர்களுக்கு ஒத்தாசையாக இயங்கிய ஒட்டுக்குழுக்களின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக, குறித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு கட்டளை பிறப்பித்தவர்களின் பெயர்கள், ஒளிப்படங்கள் மற்றும் வதை முகாம்களின் வரைபடங்கள் போன்றவற்றை தம்மிடம் சாட்சியங்களாக வழங்கியுள்ளதாக குறித்த அறிக்கையில் யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இலங்கை படையினர் மீதான மனித உரிமைகள் ஆய்வுகள் நடத்தப்படாமல் அவர்களை ஐ.நா. அமைதிகாக்கும் செயற்பாட்டில் இணைத்துக்கொள்ளக் கூடாதென்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 36 பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள், திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை, ரவிராஜ் கொலை, தடுப்பு முகாம்கள், சித்திரவதை கூடங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவற்றிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் அவற்றிற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக கடந்த மாதம் லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 இலங்கை இராணுவத்தினர் தொடர்பில் மனித உரிமை ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்கு இலங்கை படையினரை அனுப்பும் செயற்பாடும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment