சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஐதேகவினர் வலியுறுத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை ஐதேகவினர் இழிவுபடுத்துவதை கண்டித்துமே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளனர். நேற்றைய கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற யோசனையை அனுர பிரியதர்சன யாப்பா முன்மொழிந்தார். அதனை எஸ்.பி.திசநாயக்க வழிமொழிந்தார். எனினும், கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவுக்கு அமைச்சர்கள் துமிந்த திசநாயக்க, மகிந்த அமரவீர, மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கூட்டு அரசாங்கத்தில் தொடர வேண்டும் என்று சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்திய போது, ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில் தலையிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது என்றும், கட்சி என்ற அடிப்படையில் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கட்சியின் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணிப்பதென முடிவு செய்யப்பட்டதுடன், மீண்டும் மத்திய குழுவை நாளை கூட்டி, அரசாங்கத்தில் இணைந்திருப்பதா- வெளியேறுவதா என்று முடிவு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment