"நேற்று வேலை கொஞ்சம் கஷ்டம், வேலி கட்டுவதுதான். அங்கும் இங்குமாக நடந்துகொண்டே இருக்கவேண்டுமல்லவா. அதனால், அதோ அங்கு தெரிகிறதே, என்னுடைய கால்தான் அது, வெடித்துவிட்டது. இந்தக் கால்... பரவாயில்லை... என்ன கொஞ்சம் வலிக்கிறது, அவ்வளவுதான்..." – உறுதியான, காலுக்கு இதமான, பொருத்தமான கால் ஒன்று இல்லாத குறை கிருஷ்ணப்பிள்ளை ரகுவேந்தனின் குரலில் தெரிகிறது.
தோட்டம் துப்பரவாக்கும் கூலி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ரகுவேந்தன் மிதிவெடியொன்றில் சிக்கி தனது வலது காலை இழந்திருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை அங்கவீனம் என்று யாரிடமும் கையேந்தாமல் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தன்னால் முடிந்த கூலி வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.
இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் தங்களுடைய முன்னரங்குகளில் பாதுகாப்புக்காகவும் எதிரிகளை இலக்குவைத்தும் மிதிவெடிகளைப் புதைத்திருந்தார்கள். வடக்கில் – வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிழக்கில் – திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அநுராதபுரம், பொலனறுவை, புத்தளம் என அனைத்து பகுதிகளிலும் இரு தரப்பினராலும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. வடக்கு கிழக்கில் 1.5 மில்லியன் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கடந்த 2002ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்டிருந்ததாக 2012ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் மொன்டி ரணதுங்க பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளால் எத்தனை மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியாததால் மிதிவெடி அகற்றும் பணி கடினமாகியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இருந்தபோதிலும் 2002ஆம் ஆண்டிலிருந்து 2017 டிசம்பர் இறுதி வரை 7,34669 மிதிவெடிகள் மீட்கப்பட்டிருப்பதாக தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு நிலையம் தெரிவிக்கிறது.
போர் முடிவடைந்து 9 வருடங்களை அண்மிக்கின்ற நிலையில் மிதிவெடி அபாயம் காரணமாக இன்னும் தங்களுடைய வயல் காணிகளுக்கு, விவசாய நிலங்களுக்கு, மீன்பிடி இறங்குதுறைகளுக்கு போக முடியாமல் மக்கள் உறவினர்களுடைய காணிகளிலும், கூலி வேலைகளையும் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் பிரிவு உட்பட மனிதாபிமான மிதிவெடி அகற்றும் நிறுவனங்களான ஹாலோ ட்ரஸ்ட் (HALO Trust), மெக் (Mines Advisory Group), டேஸ் (DASH), சார்ப் (SHARP) போன்றன மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டில் மிதிவெடி அபாயமற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு இயக்கம் தெரிவிக்கிறது. "நான் காயமடைந்ததன் பின்னர் எங்கும் நடமாடுவதற்கு பயமாகத்தான் இருந்தது. இப்போது அந்தப் பயம் கொஞ்சம் அகலத் தொடங்கினாலும் நிலத்தைக் கொத்தும்போது ஏதாவது வித்தியாசமான சத்தமொன்று கேட்டுவிட்டால் ஒரு கணம் அப்படியே இதயம் நின்றுவிடும். நடப்பது நடக்கட்டும் என்று மறுகனமே வேலையைப் பார்ப்பேன். பிள்ளைகள் சாப்பிட்டாக வேண்டுமே..." என்கிறார் ரகுவேந்தன்.
மிதிவெடியில் சிக்குண்டு 2014ஆம் ஆண்டு இறுதி வரை 22,171 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என யுனிசெப் தெரிவித்துள்ளது. இதில் 1,603 சிவிலியன்களும், இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகளும் அடங்குகிறார்கள். போர் தீவிரமாக இடம்பெற்ற 2006ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை ஏற்பட்ட விபத்துகள் தொடர்பாக சரியான தகவல்களை எடுக்க முடியாமல் போனதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு 22 பேர் மிதிவெடியில் சிக்குண்டு உயிரழந்துள்ளார்கள் என்றும், அவற்றுள் 45 வீதமான சம்பவங்கள் கிளிநொச்சி மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளன என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது. அத்தோடு, 2014ஆம் ஆண்டு 16 பேரும் 2015ஆம் ஆண்டு 6 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் யுனிசெப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மிதிவெடியில் தனது காலை இழந்த ரகுவேந்தனின் கதை இது.
2014ஆம் ஆண்டு 34 வயதாக இருக்கும் போது ரகுவேந்தன் மிதிவெடியில் சிக்குண்டு தனது வலது காலை இழந்திருக்கிறார். "தோட்டம் துப்பரவுசெய்து நிலத்தைக் கொத்தும் வேலை செய்துவிட்டு இருவரோடு வந்துகொண்டிருந்தபோது என்னை அறியாமலேயே மிதிவெடியொன்றை மிதித்துவிட்டேன். அதனை மிதிக்கும்போது எதனையும் நான் உணரவில்லை. அடுத்த நொடியே பெரும் வெடிப்புச் சத்தத்துடன் தூக்கியெறியப்பட்டேன்" என்கிறார் ரகுவேந்தன். அந்த இடங்களில் மிதிவெடி இருக்குமென்று தான் அறிந்திருக்கவில்லை என்றும், எதுவித அபாய எச்சரிக்கையும் வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். பின்னர் அவரோடு வந்த இருவரும் தூக்கிச் சென்று பளை வைத்தியசாலையில் சேர்த்திருக்கிறார்கள். அதன் பிறகு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். “காயமடைந்து ஒரு சில மாதங்களில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தேறிவிட்டேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட காயம் பிள்ளைகளை நீண்டகாலமாகப் பாதித்திருந்தது. ஆனால், இப்போது அவர்கள் அப்படியில்லை. சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் அப்படியிருக்கவே இந்தக் கஷ்டத்திலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் மண்ணைக் கொத்துவதை விட்டுவிட்டு ஒரு சில பகுதிகளில் நடப்பதற்கே பயமாக இருக்கிறது. என்ன செய்வது, வேறு தொழில்கள் இல்லை. கூலி வேலை மட்டும்தான் இங்கு இருக்கிறது.”
ரகுவேந்தனின் மனைவி கோகிலவதனி பார்க்கத் தந்த போட்டோ அல்பத்தில் ரகுவேந்தனுக்கு விபத்துநேரும் முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை கண்டேன். இந்தப் படம் நினைவிருக்கிறதா என்று அவரிடம் கேட்க, 2002ஆம் ஆண்டு இந்த வீட்டில் வைத்துதான் எடுக்கப்பட்ட படம்தான் இது. என்னுடைய மூத்த மகன், அப்போது 3 வயதிருக்கும் என்றார் அவர். இதைப் பார்க்க கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கும், ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருந்த காலப்பகுதி அது என்று பெருமூச்சுவிட்டார் ரகுவேந்தன். "நேற்று முழு நாளும் வேலி கட்டும் வேலை, கூடுதலாக நடந்திருப்பேன். ஒழுங்காக இருந்த இந்தக் காலும் உடைந்துவிட்டது. ஏற்கனவே இருக்கின்றவையும் உடைந்துதான் இருக்கின்றன. கொஞ்சம் நன்றாக இருப்பதைத்தான் போட்டிருக்கிறேன்." அது தனது காலுக்குப் பொறுத்தமானதாக இல்லை என்று கூறும் ரகுவேந்தன், நடக்கும்போதும், உட்காரும்போதும் காலை வளைக்க முடியாமல் உள்ளது என்றும் கூறுகிறார். மூன்று கால்கள் இருக்கின்றபோதிலும் ஒரு காலை மட்டும் திருத்துவதில் அவர் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டிருந்தார். ஏன் அந்தக் காலை மட்டும் திருத்துவதற்கு சிரமப்படுகிறீர்கள் என்ற கேட்டதற்கு, “யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் இருக்கும் ஒரு நிறுவனம் தயாரிக்கும் கால்கள்தான் சிறந்தது. முன்னர் அவர்கள் இலவசமாகத்தான் தருவார்கள். ஆனால், இப்போது அதன் பெறுமதியில் அரைவாசியைச் செலுத்தியாக வேண்டும். புதிய ஒன்றை வாங்குவதற்குப் போதிய பணம் என்னிடமில்லை. அந்த நிறுவனத்தால் முன்னர் இலவசமாகக் கிடைத்த காலைத்தான் திருத்திக் கொண்டிருக்கிறேன், அடிப்பாதம் தேய்ந்துவிட்டது. கொண்டுபோய் திருத்த வேண்டும். யார் அங்கு போவது? ஒரு நாள் அதற்கு செலவாகிவிடுமே?” என்கிறார். 2011ஆம் ஆண்டு தனது கிராமமான செல்வபுரத்துக்கு மீள்குடியேற வந்தபோது வீடு தரைமட்டமாகியிருந்ததாக ரகுவேந்தன் கூறுகிறார். "கொட்டில் கட்டி கிட்டத்தட்ட 3 வருடங்களாக இருந்தோம். பிறகு எமக்கு வீட்டுத்திட்டம் கிடைத்தது. இப்போது நிம்மதியாக இருக்கிறோம். வீடொன்று இருப்பதால் ஒருவித பாதுகாப்பை உணருகிறோம். இருந்தாலும் இன்னும் வீட்டு வேலைகள் முடியவில்லை. அவற்றை செய்வதற்கு இப்போதைக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்கிறார் ரகுவேந்தன். கோகிலவதனி நடக்கும்போதெல்லாம் அவரை வெள்ளை நிறத்திலான கோழிக் குஞ்சுகள் பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. எந்த நேரமும் சாப்பாட்டைக் கொண்டு திரிவது போலவே அவைகள் நினைத்துக் கொண்டிருப்பதாக கோகிலவதனி கூறுகிறார்.
"இந்தப் புரொய்லர் கோழிக் குஞ்சுகளுக்கு இப்போது 20 நாளாகிறது. சின்னதாக இருக்கும்போது இவைகளுக்குக் கொடுக்கவேண்டிய கோழித்தீனியின் (மாஸ்) விலை கொஞ்சம் அதிகமாகும். ஒரு கிலோ 350 ரூபா, 25 கிலோ அல்லது 50 கிலோ மூட்டையாக எடுத்தால் எமக்கு இலாபம். ஒரே தடவையாக அவ்வளவு தொகை கொடுத்து வாங்குவதற்கு எம்மிடம் பணமில்லை. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மருந்துகள் இருக்கின்றன. அவற்றையும் வாங்கவேண்டும். அப்படி வாங்கிக் கொடுத்தும் இப்போதைக்கு 23 கோழிக் குஞ்சுகள் இறந்துவிட்டன" என்று கூறுகிறார் கோகிலவதனி. மருந்துகளும், மாஸும் கொடுத்தாலே போதும், ஒன்றரை மாதத்தில் இரண்டு மூன்று கிலோ அளவுக்கு கோழி வளர்ந்துவிடும் என்று கூறும் ரகுவேந்தன், மாஸ் வாங்குவதற்கு பணம் இல்லாததால் மாலை நேரம் மீன் சந்தையில் மலிவு விலையில் விற்கப்படும் மீன்களை வாங்கிவந்து அவற்றை அவித்து போடுவதாகவும் கூறுகிறார். இறுதிப் போரின்போது ரகுவேந்தனும் கோகிலவதனியும் பிள்ளைகளுடன் இடம்பெயர்ந்து வலைஞர்மடம் ஊடாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். கடும் ஷெல் வீச்சு, துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் காய்ச்சலுக்குள்ளான ஆறுமாத ஆண் குழந்தையும் அவர்களுடன் இடம்பெயர்ந்திருக்கிறது. ஒரு மாதிரி சோதனைகள், விசாரணைகளைக் கடந்து நிம்மதி மூச்சுவிட காய்ச்சலுக்குட்பட்டிருந்த குழந்தைக்கு அவசரமாக வைத்திய சேவைகள் தேவைப்பட்டுள்ளது. வைத்தியர்கள் உடனே வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளபோதும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. "வெயில், மழை, பதுங்கு குழி, வெட்டை வெளி, காடு, இடுப்பு வரை தண்ணீர், துப்பாக்கிச் சூடு, ஷெல் வீச்சு என கடந்து காப்பாற்றிய என் பிள்ளை இறந்துவிட்டது. காய்ச்சல் வந்திருந்த பிள்ளைக்கு எங்குபோய் மருந்து வாங்குவது? கொடுப்பதற்கு கைவசம் மருந்து எனும் பெயரில் ஒன்னுமே இருக்கவில்லை. எப்படியாவது காப்பாற்றி அந்தப் பக்கம் கொண்டு போய்ச் சேர்த்துவிடுவோம். அங்குபோய் வைத்தியம் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த எங்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிச்சம். யாரை நாங்கள் குற்றம் சொல்லவது?" என்கிறார் கோகிலவதனி. இடம்பெயரும்போது 16 வயதான தன்னுடைய சகோதரி ஒருவர் காணாமல்போயிருப்பதாகக் கூறுகிறார் ரகுவேந்தன். பல இடங்களில் முறைப்பாடுகள் செய்தும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
ரகுவேந்தனின் வீட்டைச் சுற்றிலும் வெடித்துச் சிதறிய ஆயுதங்கள் ஆங்காங்கே காணமுடிகிறது. ஏனைய தோட்டங்களுக்குச் சென்றாலும் இதுபோன்ற ஆயுதங்களைப் பார்க்கலாம் என்று கூறுகிறார் ரகுவேந்தன். "அண்மையில் பக்கத்துக் காணியில் பனை மரம் ஒன்று தரித்து அது கீழே விழுந்ததால் ஏதோவொன்று பாரிய சத்தத்துடன் வெடித்தது. அந்த மரத்தைத் தரித்தவர் காயமடைந்திருந்தார். இன்னுமொரு நாள் வீட்டுத் தோட்டத்தைத் துப்பரவு செய்துகொண்டிருந்தபோது வெடிக்காத ஷெல் ஒன்றைக் கண்டெடுத்து இராணுவத்துக்கு அறிவித்தேன். பிள்ளைகள் தோட்டமெல்லாம் ஓடித்திரிவார்கள். அவர்கள் இதை எடுத்து ஏதாவது செய்திருந்தால்... எங்கிருந்தாவது வெடிபொருட்கள் வெளிப்பட்டுவிடுமோ என்று எங்களுக்குப் எப்போதும் பயமாகத்தான் இருக்கிறது" என்கிறார் ரகுவேந்தன். வேலி கட்டுதல், தென்னங்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சுதல், தோட்டங்கள் துப்பரவு செய்தல், கொத்துதல் போன்ற கூலி வேலைகளுக்கு ரகுவேந்தன் சென்று வருகிறார். ஆண்களுக்கு 1,200 ரூபா, பெண்களுக்கு 1,000 ரூபா என நாள் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறும் ரகுவேந்தன், கிடைக்கும் வருமானம் சாப்பிடுவதற்கும் பிள்ளைகளின் படிப்புக்குமே போதவில்லை என்றும் கூறுகிறார். கால் நன்றாக இருந்திருந்தால் இன்னும் வேலை செய்து இதைவிட கூடுதலாக வருமானம் உழைத்திருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். குறுக்கிட்ட கோகிலவதனி, இவ்வாறான நிலைமையில் நாமிருக்க, கடன் வழங்கும் நிறுவனத்தில் இருந்து வருவதாகக் கூறிய ஒருவன், ஒரு இலட்சம் ரூபா கடன் தருவோம், ஆனால், 25,000 ரூபாவுக்கு 1,000 அடிப்படையில் 4,000 ரூபாவை நிறுவனத்துக்கு முதலில் நீங்கள் செலுத்தவேண்டும் என்று கூறினான். நான் மட்டுமல்ல இந்தப் பகுதியில் 5 பேரிடம் இவ்வாறு வசூலித்துவிட்டு போனவன் போனவன்தான். இதுவரை அவனை யாருமே காணவில்லை. கஷ்டத்தைப் பயன்படுத்தி எங்கட சனமே இவ்வாறு செய்கிறது" என்று கூறுகிறார்.
சர்வதேச மிதிவெடி தடை ஒப்பந்தத்தில் (ஒட்டாவா உடன்படிக்கை) 2017ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. மிதிவெடிகளைப் பயன்படுத்துவதையும், களஞ்சியப்படுத்தி வைப்பதையும், தயாரிப்பது, கைமாற்றுவதையும் இந்த ஒப்பந்தம் தடைசெய்கிறது. அத்தோடு, தங்களுடைய இருப்பில் உள்ள மிதிவெடிகளை அழிப்பதற்கும் ஒட்டாவா உடன்படிக்கை வழிசெய்கிறது. அதேவேளை, கடந்த வருடம் மிதிவெடி அற்ற மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்காலத்தை நினைக்கும்போது திருப்திகொள்ள முடிந்தாலும் இன்னும் ஆங்காங்கே தோட்டத்தைத் துப்பரவாக்கும்போதும், குப்பைகளை எரிக்கும்போதும் மிதிவெடிகள், வெடிபொருட்கள் வெடிக்கவே செய்கின்றன. மிதிவெடியால் காயமடைந்த ரகுவேந்தனைப் போன்றவர்கள் வாழ்வாதாரத்துக்காக கஷ்டங்களுக்கு முகம்கொடுப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
Post a Comment