எந்தவொரு நாட்டின் மீதும் மனம்போன போக்கில் குண்டுத் தாக்குதல் நடத்தாதிருக்கும் வகையில் உலக சமாதானத்துக்கான புதிய மன்றத்தை அமைக்குமாறு துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துகான் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு சிரியாவின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐ.நா. உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போய் வருவதனாலேயே இந்த விதமான அறிவிப்பை உலகத் தலைவர்கள் விடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் ஏற்படக் கூடாது என்பது ஐ.நா. சபை உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கமாகும். ஐ.நா.வில் தற்பொழுது 193 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. தெற்கு சூடான் ஐ.நா.வில் இணைந்துகொண்ட கடைசி நாடாகும். ஐ.நா. வில் இணைந்து கொண்ட நாடுகள் பொது நோக்கத்தின் அடிப்படையில் ஒன்று திரண்டு செயற்பட்டு வருகின்றன. அந்த நோக்கங்களாவன, கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்; பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல். மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல் மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல். இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே. உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்பனவாகும். இந்த நோக்கங்களை நிறைவேற்ற ஐ.நா. முடங்கிப் போய் இருக்கின்றது என்பது சிரியாவின் மீது அமெரிக்கா தலைமையில் பிரித்தானியா, பிரான்ஸ் இணைந்து மேற்கொள்ளும் தாக்குதல் சம்பவம் சிறந்த எடுத்துக் காட்டாகும். ஒர் இறைமையுள்ள நாட்டின் மீது அடர்ந்தேறி தாக்குதல் நடாத்துவது ஐ.நா.வின் நோக்கத்துக்கு முரணானது. ஐ.நா.வின் நோக்கத்தை மீறும் நாடுகளை ஐ.நா. என்ன செய்யப் போகின்றது என்பது ஏனைய நாடுகளுக்கு ஏமாற்றமாகவே உள்ளது. ஏடுகளில் மாத்திரமுள்ள சட்டங்களை வைத்துக் கொண்டு செயற்படும் ஐ.நா. வை விடுத்து மூன்றாவது பலம் மிக்க ஒர் அமைப்பு உருவாக வேண்டும் என்பதன் தேவை வெகுவாக உணரப்பட்டு வருகின்றது
Post a Comment