இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தும் என எவரும் ஊகங்களை வெளியிடவேண்டியதில்லையென சீனா தெரிவித்துள்ளது. இதனை சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவாசுனிங் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவத்தளமாக மாறுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் பரஸ்பர நன்மை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் துறைமுகத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என தெரிவித்துள்ள அவர் இந்த திட்டம் சிறப்பான விதத்தில் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வது குறித்து இரு நாடுகளும் உறுதியாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாதுகாப்பு நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து ஊகங்களை சிலர் வெளியிடவேண்டிய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment