Header Ads

test

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி!


உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விண்மீன்கள் அமைப்பினரால் விழிப்புணர்வு வாகனப்பேரணியோன்று இடம்பெறவுள்ளதாக வவுனியாவில் இன்று (19.04.2018) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைப்பின் தலைவர் நகுலேஸ்வரன் புவிகரன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உணவு வீண்விரயம் ஆகுவதை தடுக்கும் நோக்குடன் வீண்மீன்கள் அமைப்பை உருவாக்கி இல்ல , பொது நிகழ்வுகளில் மேலதிகமாகவுள்ள உணவுகளை பெற்று மக்களுக்கு வழங்கி வருகின்றோம். விண்மீன்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 8மாதங்கள் கடந்துள்ள நிலையில் பல கோடி பெறுமதியான உணவுகள் மக்களுக்கு வழங்கியுள்ளோம்
இதற்குரிய புகைப்படங்கள் ஊடகங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நீங்கள் அறிந்தவையே. இந்த நிலையில் முழுமையாக உணவு வீண்விரயமாவதினை தடுக்கும் நோக்குடனும் மக்களுக்கு உணவின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் நோக்குடனும் “விண்மீன்களின் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையேழுத்திடும் நிகழ்வு” 21,22,23 ஆகிய தினங்களில் வடக்கின் வாயிலான வவுனியாவிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணிக்கவுள்ளது. வாகன பேரணி செல்லும் சமயத்தில் மக்கள் ஆகிய உங்களின் பங்களிப்பானது மிக அவசியமானது. எனவே நீங்களும் இவ் நிகழ்வில் பங்களிப்பு செய்வதுடன் கையேழுத்து வேட்டையிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன். “உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்” என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட விளம்பர பதாதைகளை தாங்கிய எமது விளம்பர வாகன பேரணியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (21.04.2018) காலை 8.00 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப் போரணியானது ஏ9 வீதியுடாக ஓமந்தை , புளியங்குளம் , கனகராயன்குளம் , மாங்குளம் , முருகண்டி , இரணைமடு ஊடாக அன்றைய தினம் மாலை கிளிநொச்சி நகரத்தினை சென்றடையவுள்ளது. அடுத்த தினம் ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) அன்று காலை 8.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து ஏ9 வீதியுடாக பரந்தன் , இயக்கச்சி , பளை , கொடிகாமம் , சாவக்கச்சேரி , கைதடி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலத்தினை சென்றடையவுள்ளது. இதன் மறுதினம் (23.04.2018) திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பாகி யாழ் மத்திய பேரூந்து நிலையம் , நாச்சிமார் கோவிலடி , நல்லூரடி , திருநெல்வெலி, மருதானர்மடம் , கோப்பாய், புத்தூர் , நெல்லியடி , மந்திகை ஊடாக பருத்தித்துறை நகரை சென்றடைந்து பேரணி நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது. இதனுடாக சேகரிக்கப்பட்ட கையேழுத்துக்களின் பிரதிகள் வவுனியா , கிளிநொச்சி , யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கவுள்ளோம். என மேலும் தெரிவித்தார்.

No comments