சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் தொடர்வது குறித்தும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வது குறித்தும் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைகளத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா உள்ளிட்ட 200இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் மனித உரிமைகள் நிலை பற்றி இதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ”சிறிலங்காவில் 2017ஆம் ஆண்டில் மிக முக்கியமான மனித உரிமைகள் விவகாரங்களாக, சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பாலியல் அத்துமீறல்கள், கண்மூடித்தனமான கைதுகள், நீண்ட தடுத்துவைப்பு, இராணுவம் சொத்துக்களை மீளிக்காதமை, சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் தொந்தரவுகளைக் குறிப்பிடலாம். தமிழர்கள் சிறிலங்கா படையினரால் துன்புறுத்தப்படுவதும், அரசாங்கத்தின் பாகுபாடுகளும் தொடர்கின்றன. பொதுமக்களை சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் துன்புறுத்துகின்றனர். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை. ஆயுதப் போரின் போதும், அது முடிவுக்கு வந்த பின்னரும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்கிறது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், ஏனைய நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றங்களையே எட்டியுள்ளது. போர்க்கால மீறல்களுக்கு தண்டனையில் இருந்து தப்பித்தல் இன்னமும் தொடர்கிறது. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இராணுவம், துணை ஆயுதப்படைகள், காவல்துறை மற்றும் ஏனைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தண்டனை விதிக்கப்படாத நிலை இன்னமும் நீடிக்கிறது. பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கமும், நீதிமன்றங்களும் தயக்கம் காட்டுகின்றன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளக கண்காணிப்பை மேற்கொண்டு, சிவில் சமூகத்தினரை துன்புறுத்தினர் அல்லது அச்சுறுத்தினர். கடந்த ஆண்டு மே மாதம், முல்லைத்தீவில் ஆயுதப் போரில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூரும் நடவடிக்கைகளை முன்னெடுத்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டார். உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்திருந்த காணிகளை இராணுவ மய நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மிக மெதுவாகவே இடம்பெறுகின்றன. சிறிலங்கா இராணுவம் பிடித்து வைத்துள்ள காணிககள் பொருளாதார ரீதியாக பெறுமதி வாய்ந்தவை. ஒரு புத்தர் சிலையை அல்லது அரச மரத்தை வைத்து விட்டு அதற்கு பௌத்த பிக்குகள் உரிமை கொண்டாடுவதால்,அதிகாரபூர்வமாக நிலத்துக்கு உரிமை கோர முடியாதிருப்பதாக, சில சிறுபான்மை மதத்தினர் தெரிவித்துள்ளனர்” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment