வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி - வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி முல்லைத்தீவு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். “ வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆராய நாம் விசேட அமர்வை வடக்கு மாகாண சபையில் நேற்றுமுன்தினம் ஒழுங்குபடுத்தினோம். இந்த அமர்வில் பல உறுப்பினர்களும் பலவாறான கருத்துகளையும் கோரிக்கைகளையும் விடுத்துள்ளார்கள்.முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமல்லாது வன்னிப் பிரதேசங்கள் பலவற்றிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மத்திய அரச தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். நாம் இவற்றைத் தடுத்து நிறுத்த இரண்டு வகையான முயற்சிகளை எடுப்போம். எதிர்வரும் 10ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்ற இடங்களைப் பார்வையிடுவதுடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுப்போம். போராட்டத்தின் நிறைவில் மாவட்டச் செயலரிடம் மனுவொன்றைக் கையளித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எமது கோரிக்கையை வலியுறுத்துவோம். எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்பை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment