Header Ads

test

வீதி ஒழுங்கு விதி மீறல் : ஸ்தலத்திலேயே அறவிட தீர்மானித்த தண்டப்பண தொகை குறைப்பு


இதன்படி 33 வீதி ஒழுங்கு மீறல்களுக்கு 500 ரூபா முதல் 3,000 ரூபா ஸ்தல தண்டப்பணம் அறவிடப்படும். இதற்கு பாராளுமன்றம் இன்றுஅங்கீகாரம் வழங்கியது. பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளுக்கு பாராளுமன்றம் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது. இதன்படி மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி இவ்விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்க, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகளால் வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படக்கூடிய 25,000 ரூபா தண்டப்பணம் 3,000 ரூபாவாக குறைக்கப்படுகிறது. அத்தடன் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிகளை மீறும் வாகன சாரதிகளிடம் அதிகூடிய ஸ்தல தண்டப் பணமாக 25,000 ரூபா அறவிடப்படும் என நடப்பாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்த நிலையில் குறித்த விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், இது பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதி குழுவொன்றையும் நியமித்தார். இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய ஆகக்கூடிய தண்டப்பணமாக 3,000 ரூபா தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விதிகளை மீறிய சாரதிகளிடம் ஸ்தலத்தில் ஆகக் கூடிய தண்டப் பணமாக 3,000 ரூபாவும், ஆகக் குறைந்த தண்டப் பணமாக 500 ரூபாவும் அறவிடப்படும். 33 வீதி ஒழுங்கு மீறல்களுக்கு 3,000 ரூபா முதல் 500 ரூபா ஸ்தல தண்டப்பணம் அறவிடப்படும். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மதித்துச் செயற்படும் வாகனச் சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே தண்டப் பணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. சட்டங்களை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் விபத்துக்களைக் குறைக்க முடியாது. சாரதிகள் உரிய முறையில் நடந்துகொள்வதும் அவசியமானது. வீதி விபத்துக்களால் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டுப் பேர் உயிரிழக்கின்றனர். யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முன்னர் ஒரு நாள் செயலமர்வை நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களக்கு சான்றிதழொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம். அதேபோல வீதி போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு புள்ளிகளை வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதுமாத்திரமன்றி, தங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட 'கரவான்' மற்றும் முச்சக்கர வண்டியைப் போன்று ட்ரொடி சைக்கிள்கள் தொடர்பிலும் ஒழுங்கு விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதனையும் பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

No comments