முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் உள்ள பிள்ளையார், அம்மன் சிலைகளுக்கு நடுவே புத்த பிரான் முளைக்கின்றார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங் கள் தொடர்பில் ஆராய்வதற்கான வடக்கு மாகாண சபைளின் சிறப்பு அமர்வு நேற்று நடைபெற்றது. அதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-, தமிழ் மணம் பரப்பி பரந்து விரிந்து கிடந்த தமிழர்களின் தொன்னிலமான மணலாற்றுப் பிரதேசத்தில் தற்போது சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்கு புதிய சிங்களப்பெயர்கள் சூட்டப்பட்டு தமிழர்களின் அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. தொன்னில தமிழ்ப் பிரதேசமாகச் செழித்திருந்த பகுதி தற்போது சிங்களப் பெயர்களோடு சிங்களப்பகுதிகளாக காட்சியளிக்கின்றது. தமிழர்களின் தாயகப் பிரதேசங்களாகிய வடக்கையும், கிழக்கையும் துண்டாடுவதற் காக மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதற்குரிய கருவியாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்களின் பல பண்ணைகளுடன் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வியாபித்திருந்த மணலாற்றுப்பகுதியில் இருந்த மக்கள் 1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்டார்கள். 1984 மார்கழி மாதம் வெளிப்படையான அறிவித்தல் மூலம் வெளியேற்றப்பட்ட கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி ,கொக்குத்தொடுவாய் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இறுதி போர் முடிவுற்ற பின்னர் 2010-2011 காலப்பகுதிகளில் மீளக்குடி யேற அனுமதிக்கப்பட்டனர். மீள்குடியேற்றப்பட்ட இந்த மக்களின் 90சதவீதம் ஆனோர் விவசாயிகளாவார். இடப்பெயர்வுக்கு முன்னர் தமது நாளாந்த இருப்புக்காக விவசாயம் செய்த நிலங்களை இவர்கள் மீளக் குடியேறியபோது இழந்தனர். இவர்களால் தலைமுறை தலைமுறையாக பயிரிடப்பட்டு வந்த இந்த வயல் நிலங்கள் மகாவலி எல் வலயத்தின் ஒரு அபிவிருத்தி திட்டம் எனக்கூறப்படும் “கிவுல் ஓயா” திட்டத்தின் கீழ் சிங்கள மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்டு இன்று சிங்கள மக்களால் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. 2013ஆம் ஆண்டில் நிர்வாக எல்லைகள் எதையும் கொண்டிராத இந்தப் பிரதேசசெயலாளர் பிரிவுக்கு 2013.05.17ஆம் திகதிய 1811ஆம் இலக்க வர்த்தமானி மூலம் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானிக்கப்பட்ட எல்லைகள் 171ஃ7 ஆம் இலக்க 2012 ஜனவரி 24ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப் பட்ட கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவின் எல்லைகளுடன் மேற்பொருந்துவதாக உள்ளது. விகாரைகள், புத்தர்சிலைகள் குடியேற்றங்களுக்கு முன்னேற்பாடாக பௌத்தர்களே இல்லாத இங்களில் பௌத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படுகின்றது. போர்க் காலத்துக்கு முன் ஒரு விகாரையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்லை. இப்போது 11 விகாரைகள் உள்ளன என்று புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டி காட்டுகின்றது. கொக்குளாயில் இராணுவத்தினரின் துணையோடு தமிழ் மக்களின் காணியில் அம்மன் கோவில் இருந்த இடத்தில் தற்போது பௌத்த விகாரை கட்டப்படுகின்றது. நாயாற்றுப்பகுதியிலும் பிள்ளையார் சிலைக்கு அருகில் விகாரை அமைக்கப்படு கின்றது. அதற்கு முன்பாக இரா ணுவ முகாம் இருக்கின்றது. இவற்றைப் பெரும் குடியேற்றத் துக்கான ஆரம்ப வேலைகளாகக் கருத முடிகிறது. புதிய திட்டமிடல் போர் முடிவுற்று மக்கள் மீள்குடியமர்ந்த மிகவும் நெருக்கடியான 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போது இருந்த இராணுவத் தளபதியின் அழுத்தத்தால் நாயாற்றுப்பகுதியில் 78 படகுகள் கொண்டு தென்னிலங்கை மீனவர் தொழில் செய்யும் நிலை ஏற்பட்டது. 78 என்பது அடுத்த அடுத்த ஆண்டுகளில் தற்போது 300 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் தடைசெய்யப்பட்ட தொழில்களையே செய்கின்றார்கள். சமூகமுரண் செயல்களுக்கும் துணைபோகின்றார்கள். அந்தப் பகுதியில் கசிப்பு விற்கப்பட்டு, சந்தேககநபர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை, சிலாபம் “இரணவில” பகுதியில் அண்மையில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டமை தொடர்பிலான குற்றவாளி இந்தப் பகுதியில் வைத்த கைதுசெய்யப்பட்டமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின் மக்கள் பரம்பல் மாதிரியை இயற்கைக்கு முரணான வகையில் மாற்றுவது அரசின் காணிக்கொள்கையாக அமையக்கூடாது. இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரை 9.1.2.4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இப்பகுதிகளில் நடைபெறும் – நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது –- என்றார்.
Post a Comment