Header Ads

test

வைத்தியர் வரதராஜா துரைராஜா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க இன்றையநாள்!


வைத்தியர் வரதராஜா துரைராஜா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க இன்றையநாள்!(ஏப்பிரல்-20-2009)

 “மாத்தளனில் ஆமியாம்.”

“ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம்” சனம் நிறைய உள்ளே போயிட்டுதாம்,” என்று எம்செவிகளுக்கு கிடைத்த அந்தச்செய்தியோடு 2009,ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. “முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் ஓடிப்போனோம். காயப்பட்டவர்களை கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள்.” காயமடைந்தவர்களை இறக்கி இறக்கி என்னால ஏலாது.
முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்கு கீழே தரப்பாள் விரிக்கப்பட்டு அதில் காயமடைந்தவர்களை கிடத்தினோம்.
அன்று காலையில் எம்மால் எந்த விபரங்களையும் எடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அன்று மாலையில் எம்மால் முடிந்த வரையில் காயமடைந்தவர்களின் விபரங்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்களைச் சேகரித்தோம். முழுமையாக விபரங்களை பத்திரிகையில் வெளியிடமுடியவில்லை. முல்லைத்தீவு நகரப்பகுதிக்கு அருகருகே அமைந்துள்ள முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால்,வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை புதுமாத்தளன் ஆகிய கடற்கரைக்கிராமங்களே 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியில் பெருமளவு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிரதேசங்களாகும். இன்றையநாளில் , ஏப்பிரல்-20,2009 அன்று 1983 இற்கு பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை சிறிலங்கா படையினர் படுகொலை செய்திருந்தனர். எறிகணைத்தாக்குதலில் காயமடைந்தவர்களை மீண்டும் சுட்டும், பதுங்குகுழிகளில் இருந்த மக்கள் மீது கைக்குண்டுகளை வீசியும் படுகொலை செய்த இன்றையநாளில் நான் சந்தித்த முதலாவது மிகப்பெரிய அவலம்; இதுவேயாகும். இன்று ஏப்பிரல்-20. அதன் நினைவுகளோடு தான் இன்று நான் வேலைக்குப்போனேன். ஏதாவது எழுதுவம் என்று நினைக்கும் பொழுது தான் “ வைத்தியர் வரதராஜா துரைராஜா அவர்களின் நினைவு வந்தது”.

“படையினர் புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு மிகக்கிட்டிய தூரத்தில் நிற்கும் போது அவரும் இன்னொரு மருத்துவபணியாளரும் வலைஞர்மடம் பகுதியில் இருந்து கடற்கரை வழியாக புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் முக்கியமான மருந்துப்பொருட்களையும் மீட்டு வந்தவர்”. அவரிடம் இன்று பேசியபொழுது மருத்துவபணியாளர்களின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவர்கள் தங்கள் குடும்பங்களை பற்றி நினைக்காமல் காயமடைந்துவரும் மக்களுக்கு சிகிச்சை அளித்த அத்தனை பேரும் மதிப்புக்குரியவர்கள் என்று சக மருத்துவ பணியாளர்களின் பெயர்களை சொல்லி பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவருடைய முழுமையாக பகிர்வு பிறிதொரு சமயத்தில் வெளிவரும். அன்றைய நாளில் நடந்தது என்ன? வைத்தியர் வரதாராஜா….. “படையினர் எங்களைக் கண்டுவிட்டனர். எங்களை நோக்கி சுட்டுக்கொண்டிருந்தனர். நான் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடி, பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்தே புதுமாத்தளன் வைத்தியசாலைக்குள் ஓடினேன்.” இவ்வாறு இறுதியுத்தகாலப்பகுதியில் மருத்துவ பணிகளில் ஈடுபட்ட வைத்தியர் வரதராஜா துரைராஜா இன்று தெரிவித்துள்ளார்.

இவரே முல்லைதீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளராக அந்நேரத்தில் கடமையாற்றியவர். தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் எம்முடன் அன்றையநாட்களில் நடந்த கொடூர நினைவுகளை பகிர்ந்து கொண்டார். “வலைஞர்மடம் பகுதியில் தான் நாங்கள் தங்கியிருந்தோம். எங்களுக்கு அன்று காலை “மாத்தளனில் ஆமி வந்திட்டான் என்றும் நடக்கக்கூடிய நோயாளர்கள் மற்றும் பல மருத்துவபணியாளர்களும் ஆமிக்குள்ள போயிட்டினமாம்” என்று தகவல் வந்தது. “நான் வெளிக்கிட்டன். அங்க ஒருக்கா போவம் என்று” என்னை ஒருதரும் விடவில்லை. “காலை 9.30 மணிக்கு தான் எப்படியாவது போய்ப்பார்ப்பம் என்று நானும் இன்னொரு மருத்துவபணியாளரும் கடற்கரை வழியாக புதுமாத்தளன் பகுதிக்குச் சென்றோம். வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று படையினர் எம்மை நோக்கி சராமரியாக எம்மை நோக்கி சுட்டனர்.

” “நாங்கள் வாகனத்தை விட்டு இறங்கி அருகில் உள்ள பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்து வைத்தியசாலைக்குள்ளே ஓடிட்டம்.” அங்கே பலரது உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் காயப்பட்டவர்களின் முனகல் சத்தங்கள் ஒருபுறம் மறுபுறத்தே இடையிடையே சண்டையும் நடைபெறுகிறது. வைத்திசாலை ஜன்னலால் எட்டிப்பார்த்தால் நூறு மீற்றரில் ஆமி நிக்கிறான்.

வைத்தியசாலையில் இருந்த காயமடைந்தவர்களுக்கு சரியாக சிகிச்சை அவ்விடத்தில் வழங்கமுடியவில்லை. அவர்களை எம்முடன் வரவிரும்பியவர்களையும் முக்கியமான மருந்துப்பொருட்களையும் வைத்தியசாலையில் இருந்த பிறிதொரு வாகனத்தில் ஏற்றினோம். வாகனம் வெளியே எடுத்தால் ஆமி தாக்குதல் நடத்துவானோ அல்லது இல்லையோ எங்களுக்கு தெரியாது. ஏதோ! கண் இமைக்கும் நேரத்தில் வாகனத்தை வைத்தியசாலை முன்புறமாக செலுத்தி அருகில் உள்ள ஒழுங்கை ஊடாக கடற்கரைக்கு சென்று முள்ளிவாய்க்கால் சென்றடைந்தோம். அன்றைய நாளில் மக்களுடைய இழப்புத்தொகையை என்னால் சரியாக சொல்லமுடியாமல் இருக்கிறது. எல்லா இடமும் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள். அன்று எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையிலும் மிகுந்த சிரமப்பட்டு பலரது உயிர்களை காப்பாற்றியிருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. ……….



 வைத்தியர் வரதராஜா துரைராஜா அவர்கள் புதுமாத்தளன் வைத்தியசாலையில் பணிபுரியும் நாட்களில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்…..

ஊடகவியலாளர் சுரேனின் பதிவு 



No comments