யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு 15 பேர் உறுப்பினர்களை நியமிக்கும் அறிவிப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொலைநகல் மூலமாக அறிவித்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கடந்த பேரவையில் ஒருவராக இருந்த சிங்கள உறுப்பினர் எண்ணிக்கை இந்தத் தடவை இருவராக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பேரவையில் 6 பேர் புதியவர்களாவர். ஏனைய 9 பேரும் கடந்த பேரவையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். பேராசிரியர் சிவயோகநாதன், கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்ஜெயதேவ உயங்கொட, வண.ஜெரோ செல்வநாயகம், எஸ்.விஷ்ணுகாந்தன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மற்றும் பி.ஈஸ்வரதாசன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மனோசேகரம், எந்திரி டி.கே.பி.யூ.குணதிலக, மருத்துவர் பூ.லக்ஸ்மன், பேராசிரியர் எஸ்.சிவசேகரம், பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், கலாநிதி ஆறு.திருமுருகன், வி.கனகசபாபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் மற்றும் பி.ஈஸ்வரதாசன் ஆகியோர் மீளவும் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்களாக இருந்த பின்னர் பேரவை உறுப்பினர்களாகவும் இருந்தவர்களை மீண்டும் நியமிக்கக்கூடாது என்ற கோரிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டது. அதன்படி சிலர் முன்னைய வருடங்களைப் போன்று இந்தமுறை அத்தகையவர்கள் நியமிக்கப்படவில்லை என்று துணைவேந்தர் தெரிவித்தார்.பேரவையின் அமர்வு எதிர்வரும் மே 12ஆம் திகதி நடத்தப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment