மக்களது ஆணையை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு புறப்பட முன்தாக தனது கேள்வி பதிலில் தமிழ் மக்கள் விரும்பும் பட்சத்தில் தான் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார். அதுவொரு கட்சியினூடாக வருவதனையும் விட ஒரு ஐக்கிய முன்னணியூடாகவோ அல்லது வேறு ஏதாவதொரு வகையில வருவதென்ற அடிப்படையில் அவரது கருத்து ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அவ்வாறானதொரு சூழலில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை, உரிமைகளை வெற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் எமக்கு ஒரு இறுக்கமான கொள்கைமேல் பற்று கொண்ட இறுக்கமான அமைப்பு தேவை. ஏற்கனவே தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பும் மக்கள் கொடுத்த ஆணையிலிருந்த விலகிச் சென்றிருக்கின்றன. அதன் காரணமாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர்கள் பலத்த அடி வாங்கியிருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான வாக்குகளை அவர்கள் இழந்தும் இருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ் நிலையில் தமிழ் மக்கள் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவர்களது உரிமைகளை அபிலாசைகளை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய நம்பகத் தன்மை வாய்ந்த கட்சியொன்று முக்கியம். அந்தக் கட்சியென்ற அடிப்படையில் முதல்வர் புதிய கட்சியொன்றைத் தொடங்க இருக்கறாரா அல்லது கொள்கையை ஏற்றுக் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க விரும்புகிறாரா என்பது தெளிவில்லாத சூழ்நிலை உள்ளது. அவ்வாறு சரியானதொரு ஐக்கிய முன்னணி உருவாகும் பட்சத்தில் அதற்கான யாப்பு, சரியான கொள்கை, திட்டமிடல்கள் இவை எல்லாம் சரியான முறையில் உருவாகும் பட்சத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அவ்வாறு இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றது. அண்மைக்காலத்தில் நாங்கள் கூட்டமைப்பிலிருந்த வெளியேறியதற்கு கூட்டமைப்பினர் மக்கள் கொடுத்த ஆணையில் இருந்து விலத்தியிருக்கிறார்கள் என்பதே காரணம். ஆகவே மக்களது ஆணையை எடுத்து அதனை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
Post a Comment