சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பதவியேற்கும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சரவை மாற்ற திருத்தியமைக்கப்பட்டதாக இருக்காது. அது புதிய அமைச்சரவையாகவே இருக்கும். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த 6 அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வேறு 6 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். சிறிலங்கா அதிபர் மைத்திரிபபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான பதவிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளில், சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோவும், பிரதமரின் செயலர் சமன் எக்கநாயக்கவும் ஈடுபட்டுள்ளனர். கூட்டு அரசாங்கத்தில், ஐதேக மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 148 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் தான் தேவைப்படுகிறது. புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றம் கூடும் போது, திலங்க சுமதிபாலவுக்குப் பதிலாக, புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். 2015 அதிபர் தேர்தல் முடிந்த கையுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியிருந்தால், ஐதேக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியும். தோல்வியால் துவண்டு போய் அப்போது, பசில் அமெரிக்காவுக்கு போயிருந்தார். மகிந்த தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முடங்கியிருந்தார். ஆனால் ரணில் அப்படிச் செய்யவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை அவர் சிறிலங்கா அதிபரிடம் முன்மொழிந்தார். துரதிஷ்டவசமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் பலரும் இதனை மறந்து விட்டனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment