தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பதவியை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காகவும் தனது அந்த விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் கூட்டமைப்பினருக்கு தொடர்ந்தும் வக்காளத்து வாங்கும் ஐயூப் அஸ்மின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்பிலும் கட்சி நடவடிக்கைகள் தொடர்பிலும் வெளியிட்டுவரும் தேவையற்ற, மலினமான கருத்துக்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் வன்னி மாவட்ட ஐ.தே.க முன்னணி அமைப்பாளருமான றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையே மாகாண சபை தேர்தல் காலத்தில் இடம்பெற்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஐயூப் அஸ்மினுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மாகாண சபை உறுப்பினர் பதவியை வழங்கியது. கூட்டமைப்பின் போனஸில் வழங்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பதவியை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கட்டுப்பாட்டையும் விதிமுறைகளையும் மீறி தொடர்ந்தும் வலுக்கட்டாயமாக நிலைப்படுத்தி வைத்திருக்கும் ஐயூப் அஸ்மின், தனது நேர்மையான அரசியல் நடவடிக்கை தொடர்பில் தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு கொடுத்த சத்தியத்தையும் வாக்குறுதியையும் மீறி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற இஸ்லாமிய நெறிமுறைக்குப் புறம்பாக போனஸ் ஆசனத்தின் மூலம் அரசியல் செய்து வரும் ஐயூப் அஸ்மின், மக்களாணை பெற்று அரும்பணியாற்றி வரும் அமைச்சர் றிஷாத் பதியுதீனை விமர்சிப்பதற்கோ குற்றம் காணுவதற்கோ எந்தவிதமான அருகதையும் அற்றவர். வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூஜா தூக்கி வரும் அஸ்மின் அவ்வாறான நடவடிக்கை தான் சார்ந்த சமூகத்தை மீண்டும் கொத்தடிமைகளாக்கும் திட்டங்களுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீனும் துணை போக வேண்டும் என்று நினைகின்றாரா? அதிகார பகிர்வு, தேர்தல் முறை மாற்றம் ஆகியவற்றில் மக்கள் காங்கிரசுக்கு ஒரு தெளிவான பார்வை உண்டு. அக்கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் இது தொடர்பில் நடாத்திய அரசியல் போராட்டங்களின் பிரதிபலிப்புக்கள் இடைக்கால அறிக்கையில் தெளிவாக பதியப்பட்டுள்ளன. மாகாண சபை எல்லைப்பிரிப்பு உள்ளுராட்சி தேர்கல் முறை குறைபாடுகள் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் அஸ்மின், மலையக மற்றும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் இந்த சீர் திருத்தங்களுக்கு கர்த்தாவாக இருந்து பாராளுமன்றத்தில் மலையக மற்றும் முஸ்லிம் தலைவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்த போது மௌனமாக இருந்து சட்ட மூலத்துக்கு ஆதரவாக கையை உயர்த்திய தனது புதிய எசமானர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது சுட்டு விரலை நீட்ட மறுப்பதேன்?. வடக்கு மக்களின் காணிகளை சிங்கள அரசு கொள்ளையடித்ததாக அபயக்குரல் எழுப்பும் அஸ்மின், தான் சார்ந்த சமூகத்தின் பரம்பரைக் காணிகளை இனவாதிகள் அபகரித்த போதும் மீள் குடியேற்றத்துக்கு தடையாக இன்னும் செயற்படும் போதும் வாளாவிருப்பதேன்? முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தொடர்ந்தும் தடையாக இருந்து வரும் வட மாகாண சபைக்காக பரிந்து பேசும் அஸ்மின், முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை முன்னெடுக்க ஏதாவது முயற்சித்துள்ளாரா? தனது பதவியைப் பயன்படுத்தி இந்த மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த ஏதாவது உதவிகள் செய்திருந்தால் அவர் அதனை வெளிப்படுத்த வேண்டும். போனஸ் ஆசனத்தின் மூலம் பதவியை பெற்றுள்ள அஸ்மின் மக்களாணை, அரசியல் அங்கீகாரம் என்ற சொற்பதங்களுக்கெல்லாம் தூரமானவர். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் அவர்களை ஏறெடுத்தும் பார்க்காது தேர்தல் காலங்களில் மட்டும் இந்த பிரதேசங்களுக்கு வந்து “ஜால்ரா” போடுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள். அந்த கட்சிகளுக்காக அற்ப பதவிகளுக்காக ஆசைப்பட்டு அஸ்மின் இப்போது “ஜால்ரா” போடுகின்றார். மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துன்பங்களுக்கு கைகொடுத்து துயர்களை நீக்கி வரும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் தலைமையை ஏற்று தமிழ் மக்கள் மாந்தை கிழக்கிலும் மாந்தை மேற்கிலும் தெளிவான ஆணையை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. மக்கள் காங்கிரஸ் அந்த சபைகளை கைப்பற்றி தமிழ் பெருமகன்கள் இருவரை ஆட்சி பீடத்தில் ஏற்றியுள்ளது. இதன் மூலம் அந்த பிரதேச மக்களுக்கு தொடர்ந்தும் விடிவைப் பெற்றுக் கொடுக்க மக்கள் காங்கிரஸ் திடசங்கற்பம் கொண்டுள்ளது. இதனை அஸ்மின் இனியாவது தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு றிப்கான் பதியுதீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Post a Comment