சர்வதேச சட்டங்களை மீறி முல்லையில் சிங்கள குடியேற்றங்கள்: சர்வேஸ்வரன் சாடல்
இலங்கை, இந்திய ஒப்பந்தத்திற்கு முரணான வகையில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் விஹாரைகள் தொடர்பில் ஆராயும் வகையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் நிறைவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யுத்தத்தின் பின்னர் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களும் விஹாரைகளும் வேகமாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய சர்வேஸ்வரன், இது வடக்கு கிழக்கின் தொடர்ச்சியை அற்றுப்போகச் செய்கின்ற செயற்பாடு என்றும், வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்ற எண்ணத்தை அடித்து நொறுக்கும் செயற்பாடாகவே உள்ளதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ராணுவத்தையும் முப்படைகளையும் தமிழர் தாயகத்தில் குவித்திருப்பது, இந்நடவடிக்கைகளை இடையூறின்றி முழுமையாக செயற்படுத்தவே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு நிலம் தொடர்பான சகல சர்வதேச சட்டங்களையும் இலங்கை அரசாங்கம் மீறி அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், வடக்கு மாகாண சபை இது தொடர்பில் தெளிவான சட்டத்தை உருவாக்கி ஐ.நா. சபைக்கும் நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment