Header Ads

test

யாழ். மாநகரசபையில் அவை மரபை மீறிய முன்னாள் மேயர்! - சுவாரசிய சம்பவங்களுடன் முதல் அமர்வு


யாழ் மாநகரசபையின் முதலாவது அமர்வு நேற்றுக் காலை நடைபெற்றது. உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றிய இநத அமர்வில் சில சுவாரசிய சம்பவங்களும் நடந்தேறின யாழ். மாநகரசபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆசனத்தில் அமர்ந்தபடியே உரையாற்றினார். அவரது உரை முடிந்த பின்னர், யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் சபை உறுப்பினர்கள் சபையின் மாண்பினைப் பேணும் வகையில் எழுந்து நின்று உரையாற்ற வேண்டும் எனக் கூறினார்.
எனினும் அதற்கு உடனடியாகப் பதிலளிக்காமல் அலட்சியம் செய்த முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா சபை அமர்வு முடியும்போது தான், அண்மையில் காலில் சத்திரசிகிச்சை செய்து கொண்டதாகவும் அதனால்தான் எழுந்து நின்று உரையாற்றவில்லை என்றும் குறிப்பிட்டார். நேற்றைய அமர்வில் உரையாற்றிய உறுப்பினர் தர்சானந் யாழ். மாநகர முதல்வரை ஆர்னோல்ட் அண்ணன் என விழித்துப் பேசினார். இதனையடுத்து குறிப்பிட்ட முதல்வர் ஆர்னோல்ட், அண்ணன் தம்பி பாசத்தை சபை அமர்வுகளில் காட்டத் தேவையில்லை என்றும் சபையின் மாண்பினைப் பேணும் வகையில் முதல்வரை கௌரவ முதல்வர் என்றும் சபை உறுப்பினர்களை கௌரவ உறுப்பினர்கள் என்றும் அழைக்குமாறும் தர்சானந்திற்கு அறிவுரை வழங்கினார். நேற்றைய அமர்வில் கூட்டமைப்பின் உறுப்பினரான தர்சானந் கலைஞர் கருணாநிதி பாணியில், தோளில் சிவப்பு மஞ்சள் துண்டு ஒன்றை தொங்க விட்டவாறு சபை அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

No comments