Header Ads

test

விகிதாசார முறைப்படி மாகாணசபைத் தேர்தல் – ரணிலிடம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தல்


விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ், முஸ்லிம் கட்சிகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈபிடிபி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போதே மாகாணசபைத் தேர்தலை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துமாறு, மேற்படி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன், “வட்டார தேர்தல் முறை, நாட்டில் உறுதியற்ற நிலையை தோற்றுவித்திருக்கிறது. இதனால் உள்ளூராட்சி சபைகளில் நிலையான நிர்வாகங்களை அமைக்க முடியாதுள்ளது.புதிய தேர்தல் முறையே இதற்குக் காரணம். நல்ல நோக்கத்துடன் தான் அரசாங்கம் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் சில குறிப்பிட்ட திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும். எனினும், இந்தக் கலந்துரையாடலில் பங்கு பற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா, சில திருத்தங்களுடன் புதிய முறைப்படியே மாகாணசபைத் தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பெரும்பாலான தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், புதிய திருத்தங்கள் செய்யப்படும் வரை மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்றும், தற்போதுள்ள விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மீண்டும் எதிர்வரும் 19ஆம் நாள் கூடி பேசி இதுபற்றி முடிவு செய்வது என்றும், இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என்றும் அவர் கூறினார்.

No comments