சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்தில் விளக்கமறியலில் உள்ள சிறிலங்கா பிரதிப் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, சிறிலங்கா முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன என்று கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு கல்கிசை நீதிவானுக்கு அறிவித்தது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்குப் பிணை கோரி நேற்று அவரது சட்டத்தரணி அரச தலைவர் சட்டத்தரணி அனுர மெத்தகொடவால் கல்கிசை முதன்மை நீதிவான் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதன்மை விசாரணை அதிகாரியான காவல்துறை பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிவானுக்கு பதிலளித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். விளக்கமறியலில் உள்ள பிரதிப் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவுக்குப் பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் மே முதலாம் திகதி அறிவிக்கப்படும் என்று கூறிய நீதிவான் மொஹம்மட் மிஹால் அதுவரை அவரையும், வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபாலவையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மன்றில் கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.ஏ. திசேரா தெரிவித்ததாவது-, இராணுவத்தின் 112 ஆவது பிரிகேட் தொடர்பிலான விசாரணைகள் தற்சமயமும் தொடர்கிறன. மேலதிகமாக மூன்று இராணுவத்தினரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. லசந்த விக்ரமதுங்கவுடன் சேவையாற்றிய நிர்மலா கண்ணங்கர எனும் ஊடகவியலாளரின் வாக்குமூலத்தையும் நாம் பதிவு செய்தோம். அதன்போது அவர் லசந்த கொலை செய்யப்பட்ட போது சம்பவ இடத்துக்குச் சென்றதாகவும் அப்போது அங்கிருந்த லசந்தவின் காருக்குள் அவரது குறிப்புப் புத்தகத்தை அவதானித்ததாகவும், பின்னர் அது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவிடம் வினவியபோது ஒரு செவிமடுக்கும் கருவி மட்டுமே இருந்தது என்று கூறினார், குறிப்புப் புத்தகம் இருக்கவில்லை எனப் பதிலளித்தார் என்றும் தெரிவித்தார். சந்தேக நபர் குறிப்புப் புத்தகம் தொடர்பிலான தகவல்களை ஏதோ காரணத்துக்காக மறைக்கின்றார். பிணைச் சட்டத்தின் விதிவிதாங்களுக்கு அமைவாக சந்தேக நபரின் விளக்கமறியலை நீடிக்க வேண்டும் என்றார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார சார்பில் அரச சட்டத்தரணி சட்டத்தரணி அனுர மெத்தெகொட சிறப்புப் பிணைக் கோரிக்கையை முன்வைத்தார். எனது சேவை பெறுநர் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி முழு நாளும் விசாரிக்கப் பட்டு அன்று இரவு 10.45 மணிக்கு கைது செய்யப்பட்டார். இன்று வரை விளக்கமரியலில் உள்ளார். ஏற்கனவே நான் முன் வைத்த இரு பிணைக் கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டன. குற்றப் புலனாயவுப் பிரிவு விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் கூறிய விடயங்களை மையப்படுத்தியே பிணை நிராகரிக்கப்பட்டன. எனது சேவை பெறுநருக்கு எதிராக முன்வைக்கபப்டும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லை. அந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. லசந்த கொலை உட்பட அந்தக் காலப் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளை யார் செய்தார்கள் என்பது முழு நாட்டுக்கும் தெரியும். அது இரகசியமல்ல. இது தொடர்பில் அப்போதிருந்த முன்னணி இராணுவத் தலைவர்கள் செய்த சதி நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்கள் எழுதியுள்ளன. எனவே அது குறித்து யாருக்கும் ஊகித்துக்கொள்ள முடியும். லசந்தவின் குறிப்புப் புத்தகம் தொடர்பிலும், பொலிஸ் புத்தக பதிவுகள் மாற்றப்பட்டமையும் எனது சேவை பெறுநரின் ஆலோசனைக்கு அமைய செய்யப்பட்டுள்ளன என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு கூறுகின்றது. எனினும் அது தொடர்பில் பெறப்பட்ட சாட்சியங்களில் ஒன்றில் கூட எனது சேவை பெறுநரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தற்போது சுனில் குமார வழங்கிய உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை பொய் என நிரூபணமாகியுள்ளது. சிறப்பு மருத்துவ நிபுணர் மொஹான் டி சில்வாவின் அறிக்கை ஊடாகவும், சட்ட மருத்துவ அதிகாரி அஜித் தென்னகோன் தலைமையிலான மூவர் கொண்ட குழுவின் அறிக்கை ஊடாகவும் அது உறுதியாகியுள்ளது. எனவே சுனில் குமாரவுடனான தொடர்பாடல் விசாரணைகளுக்குப் பாதிப்பாக அமையப்போவதில்லை. அடிப்படையற்ற விடயங்களை நிராகரித்து சந்தேக நபருக்குப் பிணை வழங்க வேண்டும் என்று கோருகின்றேன் – என்றார். பிணைக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதன்மை விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா கருத்துக்களை முன்வைத்தார். “லசந்தவின் கொலை இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கும் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கும் இடையே சட்டத்தின் ஆட்சி எந்தளவில் இருந்தது என்பது எலோருக்கும் தெரியும். இந்தக் காலப்பகுதியில் சி.ஐ.டி.க்கு கையளிக்கப்பட்ட விசாரணைகளில் சி.ஐ.டி. லசந்தவை பின் தொடர்ந்த 5 தொலைபேசிகளை தொலைபேசிக் கோபுரத் தகவல்களுக்கு அமையக் கண்டறிந்தனர். அவை இரானுவப் புலனாய்வுப் பிரிவுக்கு சொந்தமானவை என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினர். அந்த விசாரணைகள் உடனடியாக அப்போதைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய சி.ஐ.டி.க்கு வேலைப் பளு அதிகம் எனக் கூறி லசந்த, கீத் நொயார், உபாலி தென்னகோன் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றினார். அது தொடர்பிலான விசாரணைகள் அப்போதைய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ர வாகிஷ்ட, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் உள்ளிட்ட குழுவால் முன்னெடுக்கப்பட்டன. அதில் 11 இராணுவத்தினர் அவசரகாலச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 6 நாள்களில் பொலிஸ் பினையில் விடுவிக்கப்பட் டுள்ளனர். அது தொடர்பில் நீதிமன்றுக் குக் கூட அறிவிக்கப்படவில்லை. 2015 செப்ரெம்பரில் நாம் இந்த விசாரணையைப் பொறுப்பேற்ற போது முதலில் செய்யப்பட்ட அனைத்து விசாரணைகளையும் ஆராய்ந்தோம். அதன் பின்னரே விசாரணைகளை ஆரம்பித்தோம். அதன்படியே முதலாம் சந்தேக நபரான பிணையில் உள்ள உடலாகமவை கைது செய்தோம். அவர் லசந்தவின் சாரதியைக் கடத்திச் சென்று லசந்தவை கோத்தாவே கொன்றார் எனவும் மிக் விமானக் கொள்வனவு தொடர்பிலான விவகாரம் தொடர்பில் எழுதியமையே காரணம் எனவும் கூறுவதை நிறுத்த வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். நாம் அரசியல் தேவைக்காக விசாரணைச் செய்யவில்லை. அவ்வாறு செய்தால் அரசு மாறினால் நாமும் இந்த சந்தேக நபரான பொலிஸ் அதிகாரிகளைப் போன்று குற்றவாளிக் கூண்டில் நிற்போம் என்பது எமக்குத் தெரியும். லசந்தவின் குறிப்புப் புத்தகத்தை பொலிஸ் பரிசோதகர் வீரசிங்கவே மீட்டுள்ளார். அதை அவர் அப்போது கல்கிசை குற்றவியல் பொறுப்பதிகாரியான, தற்போதைய 2 ஆம் சந்தேக நபர் சுகந்தபாலவிடம் விசாரணைகளுக்காகக் கொடுத்துள்ளார். இந்தநிலையில்தான் 3 ஆவது சந்தேக நபர் நாண்யக்கார அந்தப் புத்தகம் உள்ளிட்ட சாட்சியங்களை மாற்ற அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன கோரியே லசந்தவின் குறிப்புப் புத்தகம் கைமாறியுள்ளது. விளக்கமறி யலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, அதனுடன் தொடர்புடைய சாட்சி அழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருக்கின்றனர் என்று சந்தேகிக்கின்றோம். அதனாலேயே இந்த விடயத்தில் விடயம் அறிந்தவர்களின் வாக்கு மூலங்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுக்கின்றோம். 3ஆம் சந்தேக நபர் உயர் பொலிஸ் அதிகாரியாக இருந்தவர் என்ற ரீதியில் அவருக்குப் பொலிஸ் தினைக்களத்துக்குள் செல்வாக்கு உள்ளது. அவர் பிணையில் இருப்பின் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே பிணை வழங்க வேண்டாம்.-என்றார். வாதங்களை செவிமடுத்த நீதிவான் பிணை தொடர்பில் எதிர்வரும் மே 1 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்து அதுவரை சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்
Post a Comment