Header Ads

test

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை - தப்போவ நீர்த்தேகத்கத்தின் 20 வான்கதவுகள் திறப்பு


சீரற்ற வானிலை இதுவரையில் 19 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி இதுவரையில் 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.

ராகல சமகிபுர பிரதேசத்தில், பாதையை ஊடறுத்து பாய்ந்த நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 9 வயதான பாடசாலை மாணவி ஒருவர் நேற்று பலியானார்.

உடபுசல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 4 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே சம்பவத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பெய்த இடியுடன் கூடிய மழைக்காரணமாக நீரில் மூழ்கியிருந்த தாழ்நில பிரதேசங்களில் நீர் வழிந்து செல்வதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் மழைக்காரணமாக தங்கொட்டுவ – நாத்தாண்டியா மற்றும் நாத்தாண்டியா – குளியாபிட்டி பாதைகள் நேற்றைய தினம் நீரில் மூழ்கியிருந்தன.

அத்துடன் களுகங்கை பெருக்கெடுத்தன் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, மில்லனிய, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேசங்கள் நேற்றைய தினம் நீரில் மூழ்கியிருந்தன.

அந்த பகுதிகளில் தேங்கியிருந்த நீர் கட்டங் கட்டமாக தற்போது வழிந்தோடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதுகாப்பு நிமித்தம் மூடப்பட்ட பியகம – கடுவலை நகரங்களை இணைக்கும் பாலம் போக்குவரத்துக்காக இன்று காலை 8.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

பியகம கடுவலை நகரங்களை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி தாழிறங்கியதன் காரணமாக அந்த பாதையுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது.

அதேநேரம், புத்தளம் - தப்போவ நீர்த்தேகத்கத்தின் 20 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை தொடரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 தொடக்கம், 150 மில்லிமீற்றர் வரையிலான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மழை பெய்யும் நேரங்களில் கடுமையான இடிமின்னல் தாக்கமும் நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

No comments